பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

83



படகுகளோ ஏன் இன்னும் திரும்பவில்லை என்று குமரன் நம்பிக்குச் சந்தேகம் தட்டியது. ஒலையை எடுத்துச் சென்ற செவிட்டூமை என்ன ஆனான், அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதைப்பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாதது கவலைக்கிடமாக இருந்தது. அந்த வேளையில் பொன்வானி முகத்தில் துடுப்புகள் நீரை அளையும் ஒலி தொலைவில் மெல்லக் கேட்கலாயிற்று. எல்லாரும் செவிகளைத் தீட்டிக்கொண்டு கேட்கலாயினர். புதரில் மறைந்திருந்த வீரர்களை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் இருக்குமாறு வேண்டினான் குமரன் நம்பி.


15. நம்பியின் நாடகம்

எல்லாம் குமரன் நம்பி எதிர்பார்த்தபடியே நடந்திருந்தது. ஆனால் முற்றிலும் எதிர்பாராததொரு மாறுதலும் இருந்தது. முகத்துவாரத்தில் புகுந்து உள்ளே வருகிற படகு கண்ணுக்குத் தென்பட்டதும்தான் அந்த மாறுதல் புரிந்தது. வந்த படகில் அவன் எதிர்பாராத விதத்தில் அணிவகுப்பு இருந்தது. ஆந்தைக் கண்ணனிடம் சிறைப்பட்டிருந்த சேர நாட்டு வீரர்களிடம் இருந்து தன்னை நோக்கி பழிவராமல் இருப்பதற்காகவே இந்த ஏற்பாட்டைக் குமரன் நம்பி செய்திருந்தான். ஆனால், இப்போதும் அந்தப் பழி வராமல் காப்பாற்றிக்கொள்ள அரிய முயற்சி செய்யவேண்டிய நிலையில்தான் அவன் இருந்தான்.

முகத்துவாரத்திற்கு வந்த படகில் திரும்ப வந்திருந்த சேர நாட்டு வீரர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாகக் கடம்பர்கள் சுற்றி இருந்தனர். எனவே கடம்பர்களை அழிக்கவும் கொடுங்கோளுர் வீரர்களைக் காப்பாற்றவும் ஒரே சமயத்தில் உபாயம் தேடவேண்டி இருந்தது.