பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

வஞ்சிமாநகரம்



மண்டலேசுவரருக்கு இணையான அமைச்சருக்கு அடிக்கடி கொடுங்கோளுர் நிலைமைகளைச் சொல்லிவரும் வலியன், பூழியன் ஆகிய இருவர் மேலும் அவனது சினம் திரும்பியது. சினம் கொண்டு அவர்களை அவனால் ஒன்றும் செய்துவிட முடியாது. என்றாலும், அமைச்சர் அழைத்தனுப்பக் காரணமான ஏதாவதொரு செய்தி கொடுங்கோளுரிலிருந்து வேளாவிக்கோ மாளிகைக்கு வந்திருக்க முடியுமானால் அது வலியனாலும் பூழியனாலும்தான் வந்திருக்க முடியுமென்பதைக் குமரன் நம்பி அநுமானித்துத் தெரிந்துக்கொள்ள முடிந்தது. எவ்வளவுக் கெவ்வளவு விரைவாக வேளாவிக்கோ மாளிகைக்குச் சென்று திரும்புகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு விரைவாக மற்றக் காரியங்களைக் கவனிக்கலாம் என்று தோன்றவே உடனே அவன் வஞ்சிமாநகரத்துக்குப் பயணம் புறப்பட்டான்.

அந்தப் புரவிப் பயணத்தைத் தொடங்கும்போது முன்மாலை நேரம். முன்னிரவு நேரத்திற்குள் அமைச்சரைக்கண்டு பேசிவிட்டு நள்ளிரவுக்குள் மீண்டும் கொடுங்கோளுருக்குத் திரும்ப எண்ணியிருந்தான் அவன் என்ன காரணத்தினாலோ அவன் கொடுங்கோளுருக்குப் புரவிப் பயணம் புறப்பட்ட வேளையில் - அமைச்சர் பெருமானின் அந்தரங்க ஊழியர்களான வலியனும் பூழியனும் உடன் புறப்படாமல் கொடுங்கோளூரிலேயே தங்கி விட்டார்கள். இது வேறு குமரன் நம்பியின் மனத்தில் சந்தேகத்தை உண்டாக்கியது.

தன்னை வேளாவிக்கோ மாளிகைக்கு அனுப்பிவிட்டு இவர்கள் இருவரும் மட்டும் கொடுங்கோளுரில் தங்குவதன் மர்மம் என்னவென்பதைத் தன்னால் ஆனமட்டும் சிந்தித்துப் புரிந்துகொள்ள முயன்றான் குமரன் நம்பி. முடியாத காரியமாகப் போயிற்று அது.

கொடுங்கோளுரையும் - கோநகரமான வஞ்சிமா நகரத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் இயல்பைமீறிய அமைதி நிலவியது. இயல்பான வழக்கமான போக்குவரவோ மக்கள் நடமாட்டமோ அந்தச் சாலையில் இல்லை. அந்த அமைதி