பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடசொல் தமிழ்


5-ம் பதிப்பு:

முகவுரை

சென்ற எழுநூறு எண்ணூறு ஆண்டுகளாக நம் தாய்மொழியாய செந்தமிழ்ச் சீரிய மொழியில் ஏராளமான வடசொற்கள் வந்து கலந்துவிட்டன. ஐயகோ! இதனாலேயே பழந் தமிழ்ச் சொற்களில் பல வழங்கா தொழிந்தன. தமிழிற் கலந்து அதனை முற்றும் வேறுபடுத்தும் வடசொற்களை இப்போதே நாம் களைந்தொதுக்காவிடின் தமிழ் தன் நிலைகெட்டு வேறுமொழிபோ லாகுமென்பதற்கு ஐயமில்லை. இங்ஙனம் வேற்றுமொழிக் கலப் தமிழ்மொழி திரிபுற்றமையினாலேதான் அஃதொன்றிலிருந்தே 'மலையாளம்,' 'கன்னடம், 'தெலுங்கு' முதலான பல வேறு மொழிகள் கிளைத்தன.

இக்காலத்துத் தமிழ் மக்களிற் பெருந்தொகையினர் வட சொற்களையுந் தமிழ்ச்சொற்களையும் பிரித்தறிய முடியாதவர்களாகித் தாம் எழுதுவதிலும் பேசுவதிலும் வடசொற்களை மிகை படக் கலந்து எழுதியும் பேசியும் தமிழின் தூய்மையையும், இனிமையையும், பழமையையுங் கெடுத்து வருகின்றனர்.

என் இளமைக்காலத்தே என் அருமைத் தந்தையார் மறைமலை யடிகளாரிடம் கல்வி பயின்றமையால், வடசொற் கலப்பினால் தமிழ் தன் நிலைதிரிந்து கேடுறுவதை யான் அறிந்து வருந்தலானேன். அதுமுதல் வடசொல் தமிழ்ச்சொற்களை ஆராய்வதில் ஈடுபட்டு, 'வடசொற் றமிழ் அகரவரிசை' என்னும் தூலை இயற்றி உகூஉ பக்கங்களில் சென்ற ஆண்டில் அச்சிட்டு வெளியிட்டுள்ளேன்.

இப்போது பேச்சுவழக்கில் மிகைபட வழங்கிவரும் ஓராயிரம் வடசொற்களைமட்டும் எடுத்து இச்சுருக்க நூலைத் தமிழ்ப் பாதுகாப்புக் கழக வெளியீடாக வெளிப்படுத்துகின்றேன். மிகவும் எளிய விலைக்குக் கிடைக்கப் பெறும் இவ்வரிய நூலைப்பெற்று இனி இயன்றவரை தனித்தமிழில் எழுதவும் பேசவும் பழகிக் கொள்ளுமாறு தமிழ்நன்மக்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். பாளையங்கோட்டை,

பாளையங்கோட்டை,
18-9-88.
தி.நீலாம்பிகை