பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வண்டிக்காரன்

"நான் பெத்த பெண்ணே என்னைத் துப்புக்கெட்டவள்; பக்குவம் தெரியாதவள் என்று பேசுவதையும் கேட்டுக்கொள்ளும் காலம் வந்துவிட்டதே" என்று நினைத்து அன்னம்மாள் சோகமாக இருந்தாள்.

பக்குவமாகத்தான் பேசிப் பார்ப்போமே என்ற முடிவுக்கு வந்த அன்னம், சொக்கலிங்கத்தை எதிர்பார்த்துக் கொண்டு புளியங்குட்டை அருகே நின்று கொண்டிருந்தாள்.

சொக்கலிங்கம் வழக்கமாக அந்த வழியாக, டேவிட் வீட்டுக்குச் சைக்கிளில் போவது அன்னம்மாளுக்குத் தெரியும்.

சைக்கிள் மணிச்சத்தம் கேட்டது. சோகத்தை மறைத்துக் கொண்டு, புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டாள். அன்னம்மாளைக் கண்டதும் சொக்கலிங்கம் சைக்கிளை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கினான். பக்குவமாகப் பேசத் தொடங்கினாள்.

"தொரெ! உம்பேர்லே இம்மா ஆசையா இருக்கறாரே, அவரோட சொல்லி ஏதாச்சும் ஒரு நல்ல வேலையைத் தேடிக்கக் கூடாதாடா தம்பி! இன்னும் எவ்வளவுன்னுதான் படிப்பே?"

"என்னோட மாமாகூட அதுபோலத்தான் சொல்றாரு—ஆனா எனக்குப் படிக்கறதுக்குக் குந்தகமில்லாத வேலையா கிடைக்கணும்னு ஆசை..."

"ஏனாம்! நீயும் இந்தத் தொரை மாதிரி எழுதிக்கிட்டே காலத்தை ஓட்டிடப் போறயா...இவருக்குப் பெண்ஜாதி இல்லே...புள்ளைகுட்டி இல்லே...ஒண்டிக் கட்டை...நீ அப்படி இருக்க முடியுமா! இன்னும் எவ்வளவு காலம் காத்துக்கிட்டு இருப்பா உனக்காக..."

"எனக்காகக் காத்துக்கிட்டு இருக்கறாளா...அது எந்தப் பைத்தியக்காரப் புள்ளே..."

"ஏண்டா, தம்பி!—என் கிட்டவே ஒண்ணும் தெரியாததுபோல நடிக்கிறியா...என்னா சொக்குப் பொடி