பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

புதிய

மூசா ராவுத்தருக்கு யோசனை கூறிக்கொண்டு நாலு நட்சத்திர பீடி பிடிக்க மீண்டும் சென்றான் முத்தையன்.

"அதிர்ஷ்டம்னு ஒண்ணு இருந்தா இப்படி ஏன் அலைந்து திரிய வேண்டி இருக்குது...இதோ பார் வேலப்பா! நானும் டவுனுக்கு வந்த புதுசிலே, மில்லுக்குப் போக மனம் வரவில்லை—பல்பொடி வியாபாரம், பால் வியாபாரம் எல்லாம் ஒரு மூச்சுப் பார்த்துவிட்டு பிறகுதான், வயித்துக்கு கிடைச்சாப் போதும்னு மில்லுக்குப் போனேன். நீ இன்னமும், 'கனா' கண்டுகிட்டே இருக்கறே. எப்படி மாறிப் போயிருக்கறே தெரியுமா? துரும்பா இளைச்சிப் போயிருக்கறே. எங்கே சாப்பிடறயோ, எப்போ சாப்பிடறயோ—இப்படி இளைச்சுப் போயிட்டே..."

"அதெல்லாம் ஒண்ணுமில்லே. நமக்கு எதைச் செய்தா பணம் கிடைக்கும்னு கண்டறிய புத்தி இல்லே...பணம் சம்பாதிக்கிறாங்கன்னா, அவங்களுக்கு சூட்சம புத்தி இருக்கு; சுறுசுறுப்பு இருக்கு. நம்ம புத்தியைச் சொல்லு! ஒரே மந்தம்..."

"போடா, போ; எங்க மில்லுக்கு ஒருத்தன் வர்றான், முதலாளிகிட்டப் பேசறதுக்கு, எப்பவாவது! பெரிய பொதியன்—முகத்தைப் பார்த்தாலே முழு மூடம்னு தெரியும்—அவன் எவ்வளவு இலட்சம் சம்பாரிச்சு இருக்கான் தெரியுமா? ஐஞ்சாறு இலட்சம் இருக்கும்னு சொல்றாங்க...எல்லாம் பிராந்தி, விஸ்கி வித்துத்தான்...இதிலே புத்திசாலித்தனம் என்ன தேவைப்படுதாம்! குடிக்கிறவனுங்க, கண்ணு மண்ணு தெரியாமே விலை கொடுக்கறானுங்க; போதை, வெறி. இதனாலே, இலாபம் மத்த வியாபாரத்தைக் காட்டிலும் அதிகமா வருது; குவியுது! மத்தவனோட முட்டாள்தனத்தாலே இலாபம் வந்ததே தவிர, இவனோட புத்திசாலித்தனத்தாலே என்ன இருக்குதாம். இவனைப் பள்ளிக்கூடத்திலே, சுத்த மக்குன்னு சொல்லியே துரத்திவிட்டாராம், வாத்தியாரு...இப்ப இவனோட வாடகைக் கணக்கு எழுதிப் பிழைக்கறாரு—பெரிய அறிவாளின்னு சொல்றாங்க, அந்த ஆசாமியை..."