பொலிவு
103
செல்லியுடன் ஆனந்தமாக வாழலாம் என்று தோன்றிற்று. மறுபடியும், சே! விற்றுவிட்டு வந்த நிலத்தைத் திருப்பி வாங்காமலா அந்தக் கிராமத்திலே காலடி எடுத்து வைப்பது என்று தோன்றிற்று. இன்னும் கொஞ்ச காலம் என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான். மூன்று நாலு ஏக்கர் அசல் நஞ்சை வாங்கக்கூடிய அந்தஸ்து வந்தது. போய்விடலாம் என்று எண்ணம் வந்தது; அங்கே போய், ஏரும் எருதும் துணையென்று, மறுபடியும் முழங்காலுக்கு மேலே துணியைக் கட்டிக்கொண்டு, முண்டாசு கட்டிக் கொண்டு, உழுது கொண்டு கிடக்கவேண்டியதுதானா? இனி ஏன் அந்தப் பிழைப்பு? இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு, வேறு ஒரு 'டவுன்' போகலாம். அங்கு நல்ல வியாபாரம் ஆரம்பித்து, நாலுபேர் மதிக்கத்தக்க மனிதனாகலாம் என்று ஆசை பிறந்தது. இப்படி ஒவ்வோர் தடவை ஆசை பிறக்கும் போதும், வேலப்பன், தன்னுடன்தான் அழைத்துக்கொண்டு சென்றான் செல்லியை—கற்பனை இரதத்தில். செல்லியை அவன், தாராசசாங்கம், தமயந்தியின் நேசம் ஏற்படுகிற வரையில் மறக்கவில்லை. தாராசசாங்கம் தமயந்தியுடன் 'தொழில்' முறையிலேதான் அவனுக்கு முதல் தொடர்பு ஏற்பட்டது. வாடிக்கையாக 'சரக்கு' வாங்கி வந்ததில் இருநூறு ரூபாய் அளவுக்குப் பாக்கி ஏறிவிட்டது—பணம் வருவதாகக் காணோம். மூலைக்கடை முத்தையன் இதற்குள் வேலப்பனை, 'எஜமான்' ஆக்கிக் கொண்டிருந்தான்.
"எஜமான் சும்மாவிடக் கூடாதுங்கோ அவளை! ஆமா, பணத்தை எப்படியும் வாங்கியாகணும். நாங்க இவ்வளவு பேரு எதுக்கு இருக்கிறோம்? உங்க உப்பை தின்னுவிட்டு இந்த வேலைகூடச் செய்யாவிட்டா மனுஷ ஜென்மமா நாங்க. ஒரு உத்தரவு கொடுங்க, அவ வீட்டிலே பூந்து கலாட்டா செய்து பணத்தைக் கறந்துகிட்டு வந்து கொடுக்கிறோம்."
"முத்தையா! அவளை நீ கண்டதுண்டமா வெட்டிப் டோட்டாக்கூட, பணம் கிடைக்காது. போவுது போ; விட்டுத் தொலை. இனி 'சரக்கு' கொடுக்காதே. அவ்வளவுதான்."