பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

புதிய

எதிர்காலம் பற்றி ஏதேதோ இன்பக் கனவுகளைக் கூறி நம்பிக்கை தந்துவந்த வேலப்பன், திரும்பி வரவே போவதில்லை. ஏமாற்றம், திகைப்பு, துடிப்பு, வறுமை, ஏக்கம், பேராசை, சூது, மோசடி, காமக் களியாட்டம் எனும் பல காட்டுமிருகங்கள் அவனைத் தாக்கித் தாக்கி, பிய்த்துக் கடித்து மென்று தின்று, கீழே துப்பிவிட்டன. இனி அவன் யாருக்கும் பலன் இல்லை—அவன் இனி அவனாகவே இருக்க முடியாது!!

செல்லி, இனி எதற்காகவும் எதிர்பார்த்தும் காத்துக் கொண்டுமிருக்கவும் வேண்டியதில்லை. எது கிடைத்தாலும் சரி, மூன்றாம் தாரம், நாலாம் தாரமாக இருந்தாலும் சரி—மூட்டை சுமக்கும் கூலிக்காரனுக்கு மனைவியாக வேண்டியதானாலும் சரி தயாராகிவிட்டாள். சமூகம், ஆண் பெண் கூட்டுறவு ஒரு குறிப்பிட்ட ஏற்பாட்டிலே இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. அதை மீறுவானேன் என்ற எண்ணத்தால், திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தாள் செல்லி.

'கண்ணைத் திறக்கிறாள், கலம் தண்ணி விடுகிறாள். அவன் வானத்தைப் பார்க்கிறான், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளுகிறான். அந்தக் குடும்பம் படுகிறபாடு, கல் நெஞ்சக்காரனையும் கதறவைத்து விடுமப்பா'—என்று கிராமத்தார் பேசிக் கொண்டனர்.

ஓவிய நிபுணர் வடிவேலன் வழக்கப்படி பல கிராமியக் காட்சிகளைத் தீட்டி வந்தது போலவே, அங்கும் வந்தான்—ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, சற்றுத் தொலைவிலே ஆடுகள் மேய்ந்துக் கொண்டு இருப்பதை ஒப்புக்கு அவ்வப்போது கவனித்துக் கொண்டிருந்த செல்லியைக் கண்டான். அவனுடைய கருத்து மலர்ந்தது. கவர்ச்சிகரமான கிராமியச் சூழ்நிலையில், கட்டழகு வாய்ந்த அந்தக் குமாரி, கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்த காட்சி, முதல்தரமாக அமைந்திருந்தது. உடனே எடுத்தான், திரையையும் தீட்டுக்கோலையும்! ஓவியம் உருவெடுத்தது. ஓவியக்காரனுக்காகவே உட்கார்ந்திருப்பது போல செல்லி-