114
புதிய
அங்கே போய்ப் பாரடா, மலர்க் குவியலை! பச்சைப்பட்டின் மீது நவரத்தினங்களைத் தூவி இருப்பது போலிருக்கும்! மலர் தூவுவார்கள், ராஜகுமாரிகள் நடந்து செல்லும் பாதையில் என்று கதை படிக்கிறோம். கிராமத்துப் பெண்களுக்கு, மலர்ப்பாதை தானாகவே அமைந்திருக்கிறது. அழகுக்கேற்ற ஆற்றல் கிராமத்துப் பெண்களிடம் இருக்கிறது. இங்கே, ஏழெட்டுக் கடைக்காரர் தயவு கிடைத்தால்தானே, ஒரு எழில் மங்கையைக் காண முடியும். தையற்காரர்களின் தயவு இல்லாமல், பாதிப் பெண்கள், உருவாகவே தெரிய முடியாதே! பவுடர்காரன், எவ்வளவு அகோரங்களை 'அனுமதிக்கத்தக்கதுகள்' ஆக்கிவிடுகிறான்! இப்படித்தான் இங்கே அழகிகள் தயாரிக்கப்படுகிறார்கள். அங்கு அப்பழுக்கற்ற அழகு தானாக மலர்ந்துவிடுகிறது—காலையிலே நீராகாரம், நடுப் பகல் உணவு, இரவு, காலையிலே இருந்ததில் கொஞ்சம்—இடையிடையே மாம்பிஞ்சோ, புளியம்பழமோ, பச்சரிசி மாங்காயோ, பழுக்காத கொய்யாவோ, எதுவும் இல்லையானால் கதிரைக் கசக்கிப் புடைத்தெடுத்த, பால் ததும்பும் மணியோ, எதையோ ஒன்று வாயில் போட்டுக் குதப்பிக் கொண்டு, குதூகலமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களின் குதூகலப் பேச்சும் குறும்பான ஆடல் பாடலும், கண்டால்தானே தெரியும். இங்கே நாட்டிய ராணிகள் தங்களுக்குத் தெரிந்த தளுக்கு, குலுக்கு, மினுக்கு, வெட்டு எல்லாவற்றையும் காட்டிப் பார்க்கிறார்கள்; பாம்பாக நெளிகிறார்கள். பச்சை மயில் போல ஆடுகிறார்கள். என்ன செய்தாலும், கவர்ச்சி கனியாது என்பதைத் தெரிந்து கொண்டு, இப்போது கிராமிய நடனம் ஆடுகிறார்கள், பார்த்தாயா! நாடோடிப் பாடல்—கிராமீய நடனம் என்பதன்மீது இன்று அக்கரை சென்றதற்குக் காரணம், நகரத்து நாட்டியத்தையும், பட்டணத்து பாணியுள்ள பாட்டையும் மட்டும்கொண்டு நகரமக்களே திருப்தி கொள்ளவில்லை என்பது புரிந்து விட்டது. ஆகவேதான், கிராமீய மகிமையைக் காட்டுகிறார்கள்! எந்தக் கிராமத்திலாவது, நகரத்து நாட்டியம் பட்டணத்துப் பகட்டு நடைபெறுகிறதா? இல்லையல்லவா என்று ஆர்வம் பொங்கப் பொங்கப் பேசுவான்.