பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

புதிய

இப்படி ஒவ்வொருவருக்கு ஒரு பெயரிட்டு, உரத்த குரலில் கூப்பிடுவாள்; ஓடிச்சென்று சிலரைத் தடுத்து நிறுத்துவாள்; சிலர் கரத்தைப் பிடித்திழுத்து விளையாடுவாள்—எல்லாம் பழங்கதையாகிவிட்டது. உரத்த குரலில் பேச வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. எப்போதும் கண்பார்வையில் பட்டபடி இருக்கிறாள் வேலைக்காரி! மாமி, எதிரிலேயே சோபாவில் உட்கார்ந்து கொண்டு 'பாரதம்' படிக்கிறார். அவரோ, வந்ததும் ஓவியம் எழுதுகிறார்—அது முடிந்ததும், 'எப்படி கண்ணழகு? உன்னோடு போட்டி போடுதா? உனக்கும் இவளுக்கும் போட்டி. யார் ஜெயிப்பீர்கள்?' என்று கொஞ்சுவார்! வேறே பேச வேண்டிய நிலைமையே வருவதில்லை; வாயடைத்துக் கொண்டல்லவா இருந்திருக்கிறோம் இவ்வளவு நாட்களாக என்று எண்ணி, தனக்குத்தானே ஆச்சரியப்பட்டாள்.

பெரிய இடத்துக்கு வாழ்க்கைப்பட வந்தவள் என்பதாலே, செல்லியிடம் உபசாரம் பேச, நாகரிகப் பெண்கள் வருவதுண்டு.

"வாங்க..." என்று மரியாதையாகத்தான் அழைப்பாள். ஆனால் மறுகணமே, அவர்களுக்கும் நமக்கும் ஒட்டிவராது என்று பயம் தோன்றும்—மாமியுடன் பேசிவிட்டுப் போகட்டும் என்று இருந்துவிடுவாள். இவளுக்கென்ன இவ்வளவு கர்வம் என்று எண்ணிக் கொள்வார்களோ என்ற பயத்தால் சில நாட்களில் வந்த பெண்களுடன் பேசுவாள்; அவர்கள் கேலி செய்யும் விதமாக இருக்கும், அவளுடைய கேள்வி பதில் இரண்டுமே!

'பட்டிக்காடுன்னாலும், சுத்தமாகச் சுட்டெடுத்தது' என்றாள், ஒருவள்—வேகமாக நடந்தால், காற்று அடித்துக் கொண்டு போய்விடத்தக்க ஒத்தை நாடிக்காரி! அவளுடைய மனதில், தானோர் பூங்கொடி என்ற எண்ணம்—கொடிபோல உடல் இருந்தது! பூப்போல எதுவும் கிடையாது.

"நம்மோடு பேசுவதற்கே இவள் இவ்வளவு திண்டாடுகிறாளே, வடிவேலன் ஒரே கலை விஷயமாகப் பேசுவானே, என்ன பேசுவாள், இவள்" என்று கேட்பாள் ஒரு குறும்புக்-