பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொலிவு

123

"நானே, அவ அப்பனுக்குக் கடிதம் போட்டுக் கூப்பிடணுமா? ஏண்டா, அதுவா நியாயம்? அவளப்பாவா வந்து அழைச்சி இருக்கணும்..."

"நடவு வேலையோ, நாத்து வேலையோ, யார் கண்டா?"

"இல்லையானா தாசில் வேலையா இருக்கு! எந்த வேலையையும் இரண்டு நாளைக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, வந்து மகராஜனா அழைச்சிக்கிட்டுப் போகட்டும். நானா தடுக்கறேன்."

செல்லிக்கு விஷயம் புரிய ஆரம்பித்தது! அன்பு குறைந்தே போய்விட்டது. அவசரப்பட்டு இந்தச் கலியாணத்தைச் செய்து கொண்டோம் என்கிற எண்ணமே வடிவேலனுக்கு வந்துவிட்டது என்பது தெரிந்துவிட்டது.

தெரிந்து? உரிமைக்காகப் போராடுவேன் என்று நினைத்தாளா? அல்லது, அவனுடைய மனதைத் தன்வசம் மீண்டும் கொண்டு வரத்தக்க வழி என்ன என்று ஆராய்ந்தாளா? இல்லை. அவள் வடிவேலனாகத் தேடிக் கொண்ட மனைவி - அவள் அவனைக் கழனியோரத்தில் கண்டு சிரித்ததில்லை. களத்துமேட்டில் கை கோர்த்து விளையாடியதில்லை, கை அடித்து சத்தியம் செய்து கொடுத்ததில்லை, பொரி விளங்காய் உருண்டை கொடுத்துவிட்டு, நகக்குறியைப் பரிசாகப் பெற்றதில்லை! அவள் அவனைக் கணவனாகப் பெற்றாள்—அதுகூட இல்லை; அவன் அவளை மனைவியாகக் கொண்டிருக்கிறான். அதுதானே தொடர்பின் பொருள்? அது மாறும்; மறையும். அதற்காக என்ன செய்ய முடியும்? வந்ததை அனுபவிக்க வேண்டியதுதான் என்று கருதிக் கொண்டாள்.

கிராமச் சூழ்நிலை இல்லாமற் போனதாலேயே குலைந்து வந்த அவளுடைய கவர்ச்சி, கணவனின் மனம் மாறிவிட்டதால் ஏற்பட்ட வேதனையால், மேலும் கெட்டு விட்டது. காய்ச்சல் அதிகமானவனுக்கு, அம்மையும் வந்தால் என்ன ஆகும், அதுபோல!!