126
புதிய
கிராமத்துத் தோப்பில் மருமகப்பிள்ளை 'கூடாரம்' அடித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு, சடையாண்டி ஓடோடிச் சென்றான்.
"மருமவப் பிள்ளே! இது நல்லா இருக்குதுங்களா? கல்லுப் போல நானொருத்தன் இருக்கறப்போ, தோப்புலே வந்து தங்கிகிட்டிங்களே. வாங்க, நம்ம வீட்டுக்கு. இப்ப, புதுசா, முன்பக்கம் ஒரு கூடம்கூட போட்டு இருக்கு...வசதியாகத்தான் இருக்கு" என்று அழைத்தார். வடிவேலன் வருவதற்கில்லை என்றுகூறி அனுப்பிவிட்டான். வருத்தம், வெட்கம், சடையாண்டிக்கு. அதிலும், தன் மகளை அழைத்துவராமல், ஏதோ ஒரு 'புடலங்காயை' அழைத்துக் கொண்டு வந்திருப்பதைப் பார்த்தபோது வயிறு எரிந்தது.
இந்த வயிற்றெரிச்சலோடு வீடு சென்றால், வாசலில் வேலப்பன் நின்று கொண்டிருந்தான்—உருமாறிப்போய்! அவனைப்பார்க்கவே கஷ்டமாக இருந்தது, சடையாண்டிக்கு. துக்கம் கப்பிக் கொண்டது! எவ்வளவு அருமையாக வளர வேண்டியவன், அவனை மருமகனாக்கிக் கொள்ள மனம் எவ்வளவு துடித்தது, படுபாவி ஆடி அழிந்து, நமது ஆசையை அழித்துவிட்டு, இப்போது பட்டுப் போன மரம்போல வந்து நிற்கிறானே என்று ஆத்திரமாகக்கூட இருந்தது. அடக்கிக் கொண்டு, ஒப்புக்கு 'சேதி' விசாரித்தான். வேலப்பனுக்கு சுருக்கமாகவே பதில் சொல்லிவிட்டு, சிலோனுக்குப் போக ஏற்பாடாகிவிட்டதாகவும், செலவுக்கு ஒரு ஐம்பது ரூபாய் வேண்டும் என்றும் கேட்டான்.
மனத் துணிச்சலைப் பாரு! என் மகளோட மனக்கோட்டையைத் தூளாக்கிவிட்டு, எனக்கும் மானம் போகிறவிதமா நாடந்துவிட்டு, குடித்துக் கூத்தாடி, ஜெயிலுக்குப் போய் வந்து என்னையே பணமல்லவா கேட்கறான், பாவிப்பய—என்று கோபம்தான். ஆனால், வேலப்பனை ஏறிட்டுப் பார்த்தபோது, அவன் கண்களிலே இருந்த வேதனையைத் தெரிந்து கொண்டு சடையாண்டியால் அழுகையை வெகு சிரமப்பட்டுத்தான் நிறுத்திக் கொள்ள முடிந்தது.