பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொலிவு

127

"நாளை மறுநாள் பார்ப்போம். தோப்பிலே, மருமகப்பிள்ளை வந்திருக்காரு! வாழைத் தாரு இரண்டு, பத்து இளநீர் பறிச்சிக் கொண்டுவா; கொண்டு போய்க் கொடுத்து விட்டு வரலாம்."

"நான் வரமாட்டேன். அங்கே செல்லி வந்திருக்குமே..எப்படி அதோட முகத்திலே முழிக்கிறது? வேண்டாம்..."

"செல்லி வரலே...அவரு வேறே ஒரு சிநேகிதர்கூட வந்திருக்காரு..."

"அப்படியா? வாரேன். அவரைப் பார்த்ததே இல்லை"

இருவரும் கிளம்பினர்; தோப்பிலே கிராமபோன் இசையில் இலயித்தபடி சாய்ந்து கொண்டிருந்தாள் ஊர்மிளா! வடிவேலன் 'ஸ்டவ்' பற்றவைத்து, 'காபி' போட்டுக் கொண்டிருந்தான்.

வடிவேலனை பார்த்ததும் வேலப்பனுக்கு அடையாளம் தெரிந்துவிட்டது.

மோட்டார் கழுவ பொடிப்பயலுக்கு எட்டணா கொடுத்தவர்.!

"இவர்தானா? தங்கமானவர்; தெரியுமே!" என்றான் வேலப்பன்

"யார் இவன்?" என்று சடையாண்டியைக் கேட்டான் வடிவேலன்.

"நமக்கு வேண்டியவன்...பந்துதான்" என்றான் சடையாண்டி.

"செல்லியை நான்தானுங்க கட்டிக்கொள்ள இருந்தேன் முன்னே..." என்று கபடமற்றுச் சொன்னான் வேலப்பன். வடிவேலன், "இடியட்! ப்ரூட்! ராஸ்கல்! எவ்வளவு வாய்க்கொழுப்பு இப்படிப் பேச" என்று கூறிக் கோபித்துக் கொண்டான். ஊர்மிளா, குறும்புச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே, பலமான சிந்தனையில் ஈடுபட்டாள்.