பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

புதிய

"எப்படி ஊர்மிளா, அவ்விதம் சொல்வது? எனக்கே அவமானமாக இருக்குமே..."

"இதிலென்ன அவமானம்? வேறு எந்த வழியிலேயும் அந்தப் பட்டி இந்த இடத்தைவிட்டுப் போகமாட்டாள். சோரம் போனாள் என்று வழக்குப் போடுவதுதான் அவளை ஒழித்துக் கட்டும் வழி; எனக்குத் தெரிந்தவழி. இதற்கு உங்கள் மனம் இடங்கொடுக்கவில்லை என்றால், வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள், நான் கல்கத்தா போய்விடுகிறேன்."

"வேலப்பனுடன் செல்லி சோரத்தனமாக நடந்து கொண்டாள் என்று புகார் கூறினால், கோர்ட் நம்பவேண்டுமே—எப்படி முடியும்?"

"அது என் பொறுப்பு. நான் வேலப்பனை இங்கு வரச் செய்கிறேன். இருவரும் சந்திப்பார்கள். பழைய காதலர்களாயிற்றே! பார்த்துப் பல நாள் ஆகிவிட்டது. பதைப்பு எவ்வளவு இருக்கும்! பகலே இரவாகத் தெரியும். பக்கத்தில் எதிரில் உள்ளவர்கள்கூடக் கண்ணுக்குத் தெரியாது."

"போதும், ஊர்மிளா! என் மனம் சரியாக இல்லை. எனக்கு வேதனையாகவே இருக்கிறது."

"அப்படியானால், ஏன் வீணாக இரண்டும் கெட்டு அலைகிறீர்கள்? என்னை மறந்துவிட்டு அந்த அழகியோடு சல்லாபமாக வாழ்க்கையை நடத்துவதுதானே"

"உன்னைவிட்டுப் பிரியவே முடியாது, ஊர்மிளா! அவளை விரட்ட வேறு என்ன வழி வேண்டுமானாலும் சொல்லு. அவள் சோரம் போனவள் என்று சொல்லி வழக்குப் போடும் ஈனத்தனத்தை மட்டும் செய்யும்படி என்னைத் தூண்டாதே."

"வழக்கு போடும்படி சொன்னது தவறு...அப்படித் தானே....சரி...அவர்கள் இருவரும் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று நெடுநாளாக ஆவலாக இருந்தார்-