ஏழை
133
கிறான் என்று எண்ணிக் கொள்கிறார்கள்—நம்ப மறுக்கிறார்கள்.
கந்தப்பன், தகவல்களைத் துருவித் துருவிக் கண்டறிபவன், கணக்குப் போடுபவன், புதுப் புதுத் தொழில்கள் குறித்த திட்டமெல்லாம் போடுவதில் வல்லவன். அதை விளக்குவதிலும் திறமை மிக்கவன். ஆனால் தானாகக் காரியமாற்றுவதற்குத் துளியும் வசதியற்றவன். எனவே செல்லப்பன் போன்றவர்களிடம் சென்றுதான் அவன் தன் திட்டங்களைக் கூறமுடியும். அப்படி அவன் தந்த திட்டங்களிலே ஒன்றினால்தான் செல்லப்பன் சீமானானான் என்று துவக்கத்திலே பலமாக வதந்தி உலவிற்று. செல்லப்பன் மறுக்கவுமில்லை; ஒப்புக் கொள்ளவுமில்லை. ஆமாம் என்றுதான் வைத்துக் கொள்ளேன் என்று கூறிவிட்டுச் சிரிப்பான். அவனுடைய அலட்சியப் போக்கு ஒன்றே, கந்தப்பனின் பேச்சை எவரும் நம்பமுடியாதபடி செய்துவிட்டது. எல்லப்பனிடம் இரண்டொரு முறை கந்தப்பன் புகார் கூறிப் பார்த்தாள், நம்பாதது மட்டுமல்ல, எல்லப்பன் எரிச்சல் காட்டி ஏசித் துரத்தினான்.
புதிது புதிதாகப் பணக்காரர்களானவர்கள் என்னென்ன செய்து பொருள் ஈட்டினார்கள் என்பதைக் கேட்டுக் கேட்டுச் சுவைப்பது எல்லப்பனுக்கு வாடிக்கை. கந்தப்பன் அந்த விதமான பேச்சுப் பேசும்போது மட்டும், எல்லப்பன் அக்கரை காட்டுவான்; கால் அரை பணம்கூடக் கொடுப்பான்.
"இவ்வளவு தூரம் பேசுவானேன்—இஞ்சிமுறப்பாவில் ஒரு புதுமுறை இருக்கிறது. இருளப்பன் கம்பெனி சரக்கு வெறும் குப்பபை என்பார்கள்! அவ்வளவு தரமுள்ளதாகச் செய்யக்கூடிய முறை எனக்குத் தெரியும். தெரிந்து? வசதி வேண்டுமே?"
"வசதி என்றால் எவ்வளவு தேவைப்படும், சொல்லேன்."
"சொன்னால், நீ என்ன எடுத்துக் கொடுக்கவா போகிறாய்! உன்னிடம் ஏது?"