பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏழை

141

போகிறது—குறைந்தது பத்தாயிரம் பேருக்காகிலும் வேலை கிடைக்கும் என்ற பேச்சும் பரவலாயிற்று.

"விடுதிகள் கட்டத்தான் வேண்டும் டாக்டர் குறிப்புப்படி. தொழிலாளியின் உழைப்புதானே உண்மையான மூலதனம். பணம் என்ன செய்யும்? மண்ணைத் தோண்டுமா, இரும்பை உருக்குமா, சம்மட்டி கொண்டு அடிக்குமா, சக்கரத்தைச் சுற்றுமா! உழைப்பினால்தானே இது முடியும். தொழிலாளர்கள் திடகாத்திரமாக இருந்தால்தானே உழைப்பின் பயன் முழுதும் கிடைக்கும்."

"விடுதி கட்டுவது என்றால் ஏராளமாகச் செலவு ஆகுமே?"

"செலவு செய்தால் என்ன? வாடகை ஈடுசெய்துவிடுகிறது. நிலத்திற்காவது செலவு இருக்கிறது; பலவிதமான செலவு. வீட்டுக்கு என்னய்யா! கட்டிப் போட்டால், வாடகை தானாக வருகிறது, மாதாமாதம்."

"தொழிலாளர்கள் ஒழுங்காக வாடகை கொடுப்பார்களா?"

"அவர்களை ஏன் கேட்கிறாய். அதற்கு நான் இருக்கிறேன். வாடகையை நான் கட்டிவிட்டு, அவர்களின் கூலியில் பிடித்துக் கொண்டு கணக்கைச் சரிசெய்து கொள்கிறேன்."

"அப்படி ஏற்பாடு இருந்தால் மோசமில்லை."

"மோசமில்லையா! பெரிய ஆளய்யா நீ! போட்ட முதலுக்குச் சரியான இலாபம் கிடைக்கும் என்பதைக் கூறக்கூட மனம் இல்லையா! பெரிய அழுத்தக்காரராச்சே."

"ஐயோ, அப்படி எல்லாம் இல்லை; உங்கள் யோசனையின்படியே..."

"எத்தனை வீடுகள் கட்ட உத்தேசம்? ஏனென்றால், இடம் கிடைப்பது சற்றுச் சிரமம்."