142
ஏழை
"இடத்துக்கு நான் எங்கே போவேன்? ஆலைக்குப் பக்கத்திலேயே, நீங்கள்தான் நிலம் தரவேண்டும்."
"போச்சுடா! என் அடி மடியிலேயே கைவைத்து விட்டீர்களா? சரிதான்! ஆலைக்குப் பக்கத்து நிலத்தை நான் உம்முடைய பணத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டு விற்றுவிட்டால், நாளைக்கு ஆலை விரிவாக வேண்டுமானால், இடத்துக்கு நான் எங்கே போவது?"
"அப்படிச் சொல்லிவிடக் கூடாது. 200 ஏக்கர் அளவு இருக்கிறது உமக்கு இங்கு. எனக்கு அதிகம் வேண்டியதில்லையே! 20, 30 ஏக்கர் இருந்தால் போதும்."
இந்த உரையாடல், செல்லப்பனுக்கு ஆலை வாங்கச் செலவிட்ட பணத்திலே சரிபாதி கிடைக்க வழி செய்துவிட்டது.
தொழிலாளர்களுக்கான ஓட்டல் நடத்த ஒருவன் வந்தான்—ஐயாயிரம் அதன் மூலம்.
சினிமாக் கொட்டகை நடத்தினால் ஏராளமான இலாபம் வரும் என்ற ஆசையில் போட்டி போட்டுக் கொண்டு இடம் கேட்க வந்தார்கள்—பத்தாயிரம் அதிலே!
இப்படிப் பல வழிகளில் ஆலை ஆரம்பிக்காமலேயே, ஆலைக்காகச் செலவிட்ட பணத்தைப் போல இரட்டிப்பு மடங்கு பணம் செல்லப்பனுக்குக் கிடைத்துவிட்டது.
விடுதி கட்டச் சாமான்கள் சேகரம் செய்து கொண்டிருந்தார் வில்வம்.
சினிமா துவக்க, கட்டிட அமைப்புக்கான வேலையில் ஈடுபட்டார் பாட்சா சாயபு.
பணம் செல்லப்பனிடம் சேர்ந்துவிட்டது.
செல்லப்பன் ஏற்படுத்திய பரபரப்பினைக் கண்டு, வண்ணக் கம்பெனிக்காரனுக்கே சபலம் தட்டிற்று.