பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏழை

143

'இருவரும் கூட்டாக ஆலையை நடத்தலாம்' என்று பேச்சைத் துவக்கினான்.

"வேண்டாம்! நீயே நடத்து. எனக்கு இதுவரை ஆகியிருக்கிற செலவுடன் ஏதோ ஒரு அளவு இலாபம் கூட்டிக் கொடுத்துவிடு. எனக்கு எதற்காக அதிகமான தொழில்? பலரும் தொழிலில் ஈடுபட வேண்டும். முதல்நாள் உன்னைப் பார்த்தபோதே எனக்கு உன்னை மிகவும் பிடித்துவிட்டது"

ஆலை, கைமாறி விட்டது! இலாபம் செல்லப்பன் பெட்டிக்குச் சென்றது.

விடுதி கட்டுபவனும், கொட்டகை நடத்துபவனும், நடையாய் நடக்கிறார்கள், வண்ணக் கம்பெனி முதலாளியிடம். "எப்போது ஆலை துவக்கப் போகிறீர்கள்? உங்களை நம்பி நாங்கள் நிறையப் பணம் செலவழித்து விட்டோம். கடன்பட்டுவிட்டோம். கை கொடுக்க வேண்டும்" என்று கேட்கிறார்கள். வண்ணக் கம்பெனி முதலாளி வாய் திறக்கவில்லை! காரணம் இரும்புப் பட்டறை நடத்த, டில்லி 'உத்தரவு' தர மறுத்துவிட்டது 'பார்க்கலாம், போய் வாருங்கள்' என்று மட்டுமே அவரால் கூற முடிகிறது.

செல்லப்பனாக இருந்தால், இந்நேரம் ஆலை ஓடிக் கொண்டல்லவா இருக்கும். அவன் கெட்டிக்காரன். நடத்தியிருப்பான். நடுவிலே இந்த ஆசாமி நுழைந்து பேராசை கொண்டு ஆலையை வாங்கிக் கொண்டான். பெரிய மனிதன் கேட்கிறானே என்று செல்லப்பன் ஆலையை விற்றுவிட்டான். வகை இருந்தால்தானே நடத்த? இவனால் நமக்கெல்லாம் நஷ்டம் என்று மற்றவர் பேசிக் கொள்கிறார்கள். செல்லப்பன், ஆலை நடத்துவதாக முன்னேற்பாடுகள் செய்ததன் பலனாகக் கிட்டத்தட்ட இலட்ச ரூபாய் சம்பாதித்துக் கொண்டான்.

"எல்லப்பா! வீணாக ஏன் புதுப் புதுத் தொழிலிலே ஈடுபடுகிறாய்? தனியாகத் தொழில் நடத்துவது கடினம். என் யோசனையின்படி நடந்துகொள்." என்று செல்லப்-