148
ஏழை
"இங்கே வெற்றிதான் உனக்கு. இந்தத் தொழிலில் வெற்றி கிடைத்தே தீரும்."
"அப்படிச் சொல்வதற்கு இல்லையே! கெட்டுவிட்டதே இப்போதே."
"கெட்டுவிட்டதா! எது? ஏன்? என்ன சொல்கிறாய்?"
"வைரம் கடத்திவரச் சொல்லி என்னை அனுப்ப ஏற்பாடு செய்கிறாயே, அது கெட்டுவிட்டது என்றுதான் சொல்கிறேன். எனக்கு வேலை கொடுக்கத்தான் நீ விரும்புகிறாய்! எனக்கும் இலாபகரமான ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடத்தான் விருப்பம். பொன்னான வாய்ப்பு அளிக்கிறாய் என்று எண்ணிப் பூரித்தேன்...ஆனால்..."
"ஆனால் என்ன, ஆனால்...!"
"இருவருக்குமே வேறு வேலை வந்துவிட்டதே! உன்னைக் கைது செய்யும் வேலை எனக்கும், உள்ளதை உள்ளபடி ஒப்புக் கொண்டு போலீசில் சரண் அடையும் வேலை உனக்கும்! திகைக்காதே செல்லப்பா! நான் இந்த வட்டாரத்தில் பணியாற்றும், துப்பறியும் மேலதிகாரி! அதுதான் என் நிரந்தரமான வேலை! அதற்குத் துணையாக, அவ்வப்போது சில வேலைகளிலே ஈடுபடுவதுண்டு. எட்டு இடங்கள் என்றாயே, உண்மை! அவைகளிலே இருந்து அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், நிரம்ப! தகவல்கள் கிடைக்கும்வரையில்தானே அந்த வேலையில் ஈடுபடவேண்டும். பிறகு ஏன்? தொட்டது துலங்காது என்று கூறினாய் அல்லவா! உண்மை என்ன தெரியுமோ? என் நிரந்தர வேலை, துப்பறிதல்; தீயோரைக் கைப்பிடியாகப் பிடித்தல். எட்டு இடங்களிலும் இதேதான் வேலை! எழுந்திரு தகறாரு செய்யாமல், போலீஸ் வண்டி தயாராக இருக்கிறது. மேங்காவும் அதிலேதான்!!"
செல்லப்பன், அதிர்ச்சியுற்றான். அப்பாவிபோல நடித்து வந்த எல்லப்பன், எவர் வலையிலும் விழாமல் தப்பித்துக் கொண்டு வந்த தன்னைச் சிக்கவைத்துவிட்டானே என்ற அதிர்ச்சி.