மகன்
15
இரவு சடையப்பன், தயங்கித் தயங்கி மகனிடம் பேசலானான்:
"சொக்கலிங்கம்! நீ இவ்வளவு காலமாக எவ்வளவோ நல்லபடியாக வாழ்ந்து வந்தாய், உன் மாமன் தயவால்! அறிவாளிகளோடு பழகி வந்தாய். நாம் இனிப் போக வேண்டிய இடமோ, ஜெமீன். அட்டகாசமும் ஆணவமும் நிரம்பிய இடம்! ஜெமீன்தார் ஜெம்புலிங்கபூபதி கொடியவர் அல்ல; ஆனால் ஜெமீன்தாருக்கு இருக்க வேண்டிய முடுக்கு, கண்டிப்பு எல்லாம் நிரம்பியவர். எனக்கோ அங்கு என்ன வேலை தெரியுமல்லவா..."
"மாமா இரண்டொரு முறை சொல்லியிருக்கிறாரப்பா."
"வண்டிக்காரன்! குதிரை கொட்டிலுக்குப் பக்கத்திலே குடிசை! அங்குதான் நீயும் வந்திருக்க வேண்டும். அந்தக் கேவலமான இடத்திலே நீ இருக்கக் கூடாது என்பதற்காகத்தானடா மகனே! பெற்ற பாசத்தை எல்லாம் அவளும் நானும் அடக்கிக் கொண்டு இவ்வளவு காலம் உன்னைப் பிரிந்து இருந்தோம். இப்போது உன்னை அந்த நரகத்துக்கு அல்லவா அழைத்துப் போக வேண்டி இருக்கிறது."
"நீங்கள் அங்கே இருக்கும்போது நான் மட்டும் இருக்கக் கூடாதா அப்பா! மேலும் எனக்கு ஒரு வேலை கிடைக்கிற வரையில்தானே இந்தக் கஷ்டமெல்லாம்? பிறகு நீங்கள் எதற்காக வண்டிக்காரராக இருக்க வேண்டும்? குடும்பத்தைக் காப்பாற்ற நான் எந்தப் பாடுபடவும் தயாராக இருக்கிறேனப்பா! வேலையும் கிடைத்துவிடும், டேவிட் கொடுத்துள்ள சிபாரிசு போதும் நமக்கு..."
"வேலை தயாராக இருக்கிறது மகனே! கௌரவமான வேலை. ஜெமீனிலேயே!"
"பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று."
"அப்படிச் சொல்வதற்கில்லை அப்பா! ஜெமீன்தார் தமது பேரப்பிள்ளைகளுக்கு, படிப்பு சொல்லிக் கொடுக்க