பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


4
லட்சாதிபதி


"இல்லிங்களே!"

"பாருங்க செட்டியார்."

"உங்களுக்கா இல்லேங்கப் போகிறேன். இருந்தா கேக்கணுமா?"

"ரொம்ப அவசரம். இல்லையானா உங்களுக்குத் தொந்தரவு கொடுப்பேனா?"

"அது சரி. நீங்களும் ரொம்ப நாள் வாடிக்கை, நாணயமான கை. என் கையிலேயோ சரக்கு இல்லை. என்னை என்னதான் செய்யச் சொல்றீங்க? ஊம்..சரி. சாயந்தரம் 6 மணிக்கு மேலே வாங்க, பார்க்கலாம்."

"கட்டாயம் ஏற்பாடு பண்ண வேணும், கைவிரிச்சுடக் கூடாது. உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்."

"சரி. வாங்க! கையோடு ரூபா கொண்டுவாங்க...வீசை" என்று சொல்லி மூன்று விரல்களைப் பிரித்துக் காட்டினார் செட்டியார்.

அந்தத் தெருமுனையில் செட்டியார் கடை வைக்கும் போது, "என்ன வியாபாரம் இங்கே நடந்துவிடும் என்று செட்டி கடை வைக்கிறான்?" என்றுதான் சிலர் எண்ணினர். அப்போது அவர் செட்டியார் அல்ல...செட்டிதான்! செட்டியாரும் மிகுந்த நம்பிக்கையோடு கடையைத் துவக்கவில்லை. ஏதோ திண்ணையிலே குந்தியிருப்பதைக் கடையிலே குந்தியிருக்கலாமே என்றுதான் கடையைத் தொடங்கினார்.