லட்சாதிபதி
151
ஆனால் நாளடைவில் அவருக்கே திகைப்பு தரும் வகையில் வியாபாரம் தழைத்தது. அவ்வப்போது சிலசில சரக்குகளுக்கு ஏற்பட்ட கிராக்கி அவருக்குப் பெரிய உதவியாக வந்து சேர்ந்தது. ஒரு ரூபாய்க்கு வாங்கிய சாமான், நாலு ரூபாய்க்குக்கூட விற்றது. சாமான் கிடைக்காதபோது அளவும் நிறையும்கூட செட்டியார் விருப்பப்படிதான். வியாபாரம் தழைத்ததைப் போலவே அவருடைய உடலும் தழைத்தது—பருத்தது என்பது பொருத்தமான சொல். செட்டி என்று சொன்னவர்கள் செட்டியார் என்று சொல்லத் தலைப்பட்டார்கள். செட்டியாரும் அழகுக்காக நெற்றி நடுவில் மட்டும் மெல்லிய சிவப்புக்கோடாக இட்டுக்கொண்டு இருந்த ஒற்றை நாமத்தை இருபக்கமும் வெள்ளையைத் தாராளமாகக் குழைத்துத் தடவி தம்முடைய பக்தியை வெளிப்படுத்திக் கொண்டார். கடையில் அலங்காரமாக இருக்கட்டும் என்றுதான் முனையிலே முடிச்சோடு கூடிய ஒரு கயிற்றைத் தொங்கவிட்டிருந்தார். இப்போதெல்லாம் அதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளாவிட்டால் செட்டியாரால் எழுந்திருக்க முடிவது இல்லை.
இத்தனை மாற்றமும் செட்டியாரின் திறமையால் வந்தவையே. இருப்பதை இல்லை என்று சொல்லியும், இல்லாததை எங்காவது வாங்கிக் கொடுத்தும், இப்படியாகச் செய்த வியாபாரத்தில் விளைந்த மாறுதல் இவ்வளவும். அவருக்கு உதவியாக அவ்வப்பொழுது சில பொருள்கள் 'கட்டுப்பாடு' ஆகும். முன் நாள் செட்டியார் கடையில் அது எத்தனை மூட்டை இருந்தாலும் மறுநாள் இல்லாது போகும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும், தக்க மரியாதை உடன்தான்!
கொஞ்ச நாட்களாகச் சர்க்கரை அப்படித்தான், விசேஷமான மரியாதை-கௌரவங்களுடன் மாலை 6 மணிக்கு மேல் வெளிவந்து கொண்டிருக்கிறது. மிகுந்த சிரமத்தின் பேரில், மிகவும் வேண்டியவர்கள்தான் அதையும் சாதிக்க முடிந்தது. இத்தனைக்கும் அந்த ஊரில் சர்க்கரைக்குக் 'கார்டு'. சர்க்கரை போதாதவர்கள் என்ன செய்வார்கள்? செட்டியார் இருக்கப் பயம் ஏன்?