பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

லட்சாதிபதி

மந்தத்தில் தொடங்கிய வியாபாரம் படிப்படியாக உயர்ந்து, மதிப்பான நிலைக்கு வந்துவிட்டது. "செட்டியாரிடம் ரொக்கம் ரொம்ப இருக்கும்" என்று பல பேர் பேசத் தலைப்பட்டனர். சிலர் 'ஒரு லட்சம்' என்றுகூட எண்ணி வைத்தவர்களைப்போல் சொன்னார்கள். ஆனால் உண்மை யாருக்கும் தெரியாது. ஏன் என்றால் செட்டியார் தன் கையிருப்பை பாங்கியில் போடுவது இல்லை. கடையை விட்டுவிட்டுப் பாங்கிக்குப் போக வேண்டும், அங்கே கும்பலோடு நின்று பணம் போட வேண்டும், எடுக்க வேண்டும். போடும்போதும் எடுக்கும்போதும் நாலு பேர் பார்ப்பார்கள். ஒருவர் கண் மாதிரி ஒருவர் கண் இருக்காது. ஏனிந்தத் தொல்லை என்று எண்ணினாரோ என்னவோ! நாளதுவரை செட்டியார் பாங்கிக்குப் போனது இல்லை. ஆகவே அவருடைய இருப்பு விஷயம் அவர் ஒருவர்க்கே தெரியும். மனைவிக்குத் தெரியுமோ என்னமோ, நமக்குத் தெரியாது. யாராவது கொஞ்சம் நெருங்கிப் பழகுகின்றவர்கள், "உங்களுக்கு என்ன செட்டியாரே! நீங்கள் லட்சாதிபதி" என்றால், காதுவரை விரியும்படி ஒரு புன்னகை செய்துவிட்டு, "உங்களுக்கென்ன சொல்லாமல்! எனக்கல்லவா உண்மைத் தெரியும்", என்று சொல்வாரே ஒழிய வேறு எதுவும் பேசுவது இல்லை.

'சீனாக்காரன் வருகிறானாமே! அணுகுண்டு போடுவானோ'-இந்த மாதிரிப் பேச்சுக்களுக்குக்கூட செட்டியார் கலங்கமாட்டார். ஓய்வாக இருக்கும்போது, காலையில் பாங்கிப் பெட்டி இடுக்கில் செருகிய தினசரியை எடுத்துக் கண்ணோட்டம் விடும்போது எந்தச் செய்தியும் அவரை ஒன்றும் செய்துவிட முடியாது. 'லாரி ஏறி குழந்தை மரணம்' என்று படித்தால்கூட 'பாவம்' என்று சொல்ல மாட்டார். "தலையெழுத்து யாரை விடும்?" என்றுதான் சொல்வார். அப்படிப்பட்டவர் ஒரு நாள் பத்திரிகையைப் படித்துக் கொண்டு வரும்போது "ஐயோ—இதென்ன அநியாயம்" என்று அலறினார். எதிரே நின்றிருந்த வீட்டு வேலைக்காரி அலமேலுகூடப் பதறிப்போய், "என்னங்க, என்ன சமாசாரம்?" என்று கேட்டாள். நிமிர்ந்து பார்த்த செட்டியார்,