பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

லட்சாதிபதி

153

"என்ன சங்கதி? எங்கே வந்தே? போ! அப்பாலே வா!" என்று விரட்டினார். அலுமேலுவுக்கே அது அதிசயமாக இருந்தது. வீட்டிலே எஜமானி அம்மா, ஏதாவது சங்கதி இருந்தால், வீட்டுக்குத் தேவையான சாமான்கள் முதலியவற்றைப் பற்றி, அலமேலுவிடம்தான் சொல்லியனுப்புவார். கடையிலே கூட்டம் இல்லாதபோது அவள் வந்து போவாள். அவள் வருவதைச் செட்டியார் கொஞ்சம் ஆவலோடு எதிர்பார்த்தார் என்றுகூட சொல்லலாம். அவரும் மனிதர் தானே? அதிலும் அலுமேலுவுக்குக் கொஞ்சம் அலங்காரத்திலே விருப்பம். அவளோடு பேசுவது வியாபாரத்திற்கும் கெடுதல் இல்லாத நேரம். பேச்சுக்குக் கூடவா பஞ்சம்! ஆனால் அந்த அலுமேலுவையே செட்டியார் "அப்புறம் வா—போ, போ" என்று விரட்டி விட்டாரே! ஏன்?

"ஏனோ?" என்று எண்ணியபடி அலுமேலு போய் விட்டாள். செட்டியாருடைய பதறல் போகவில்லை. திரு திரு என்று விழித்தார். கீழும் மேலும் பார்த்தார். பித்துப் பிடித்தவர்போல் ஆனார். பத்திரிகையில் அப்படி என்ன தான் வந்திருந்தது?

கள்ளப் பணம் சிக்கியது.

"இவ்வூரில் பல வியாபாரிகளின் வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டபோது லட்சக்கணக்கான கள்ளப்பணம் கண்டு பிடிக்கப்பட்டது. சிலருடைய வீடுகளில் குளியல் அறையிலும், கழிவிடங்களிலும், படுக்கையிலும், பூஜை அறையிலும், கணக்குகளும், ரூபாயும் கண்டு பிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டன. மேலும் பல ஊர்களில் சோதனை நடத்தப்படும் என்று தெரிகிறது."

என்ற செய்திதான் பெரிதாக வந்திருந்தது. இதைப் படித்துத்தான் செட்டியார் கலங்கிவிட்டார். அவர் பணத்தை கணக்கே எழுதாத-கணக்கில்லாமல் எங்கே வைத்திருக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். இதுவரை அதைக் கண்டவர்கள் யாருமில்லை. ஆனால் இதோ அதிகாரிகள்! குளியல் அறை, கழிவிடம், படுக்கை எல்லாவற்றையுமல்லவா குடை-