பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

லட்சாதிபதி

155

மறுநாள் செட்டியாரின் கடையில் உட்கார்ந்திருந்தபோது நாலைந்து ஜீப்புகள் அவசரம் அவசரமாகப் பறந்து கொண்டிருந்ததைக் கண்டார். புதிய புதிய அதிகாரிகள் அந்த வண்டிகளிலே இருந்தனர். அவர்கள் யார் என்பதையாவது தெரிந்து கொள்ளலாம் என்றால் யாரைக் கேட்பது? கேட்டால் ஒரு வேளை வீணாகச் சந்தேகம் வருமோ, என்னமோ? சும்மா இருக்கும் சங்கை ஏன் ஊதிக் கெடுக்கவேண்டுமென்ற எண்ணத்தில் யாரையும் கேட்கவில்லை. தீர்மானமே செய்துவிட்டார், அவர்கள் சோதனை செய்ய வந்த அதிகாரிகள்தான் என்று. சுரத்தில்லாமல் கடையில் இயந்திரம் மாதிரி உட்கார்ந்து அளந்து நிறுத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவருடைய மனமோ தீவிரமான எண்ணங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. எப்படியாவது தம் வசம் இருக்கும் பெருந்தொகையை அதிகாரிகள் கண்ணில் படாமல் மறைத்துவிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார். எங்கே ஒளிப்பது? அதுதான் தெரியவில்லை. கழிவிடம், மறைவிடம், படுக்கையறை, பூஜை அறை எதையும் விடுவது இல்லையாமே? எங்கேதான் ஒளித்து வைப்பது? சே! என்ன சங்கடம் இது!

தன்னை ஒரு புள்ளியாக மதித்து வந்து சோதனை போடுவார்களா, சின்ன கடைதானே என்று விட்டுவிடுவார்கள் என்று ஒரு ஆசை.

ஆனால், மறுகணமே அது மறைந்துவிடும். எப்படிச் சொல்லமுடியும்? தன்மீது பலருக்குப் பொறாமை என்பதைச் செட்டியார் அறிவார். எவன் எந்த அதிகாரிக்கு மொட்டைக் கடிதம் எழுதுவனோ? மொட்டைக் கடிதம் எழுதுவது என்ன, நேரே போய்ச் சொல்லிவிட்டு வந்தால்தான் அவர் என்ன செய்ய முடியும்?

எப்படியும் கைவசம் உள்ள தொகையை, இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றிவிட வேண்டும். இந்தக் கண்டம் தாண்டினால் பிறகு பார்த்துக் கொள்ளலாம். நிலமோ, வீடோ