20
வண்டிக்காரன்
கவும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் போடுகிற மற்றொரு நிபந்தனைதானப்பா என் நெஞ்சிலே நெருப்பை அள்ளிப் போடுவது போல இருக்கிறது. எப்படியப்பா மனம் இடம் கொடுக்கும்? ஏனப்பா அப்படி மறைந்து வாழ வேண்டும்? இவர் என் அப்பா என்று சொல்லிக் கொள்வதற்கு நான் ஏனப்பா கூச்சப்படவேண்டும்?"
"தம்பி! நீயும் கூச்சப்பட மாட்டாய்; எனக்கும் நீ 'அப்பா! அம்மா!' என்று கூப்பிடக் கேட்பதைவிட இன்பம் வேறு இருக்க முடியுமா? என் மகனைப் பார்த்தீர்களா! எவ்வளவு அழகாக இருக்கிறான்; அவன் எவ்வளவு பெரிய அறிவாளி தெரியுமா! ஊர் ஜனங்கள் எல்லாம் வெள்ளைக்காரத் துரைகளைக் கண்டால் பயந்து கொள்கிறார்களே, என் மகன் அந்தத் துரைகளிடம் எவ்வளவு தாராளமாகப் பழகுகிறான், தெரியுமா என்றெல்லாம் சொல்லிப் பெருமைப்படத்தான் நினைக்கிறாள் உன் அம்மா...ஆனால்—"
"ஆனால் என்னப்பா ஆனால்! அம்மா பெருமைப்படுவதிலே, என்ன தவறு? எல்லாப் பிள்ளைகளுமா, இன்று என் அளவுக்கு சர்க்கார் பாஷையைப் படித்திருக்கிறார்கள். உத்தியோகம் பார்க்கும் யோக்கியதையைப் பெற்றிருக்கிறார்கள்! அம்மாவுக்கு ஆனந்தமாகத்தான் இருக்கும்..."
"அம்மாவும் நானும் ஆனந்தம் அடைய ஒரே வழி நான் சொன்ன வழிதான்..."
"என்னவழி அது! எந்த மகனும், எவ்வளவு மோசமான குணம் கொண்ட மகனும் செய்யத் துணியாததை நான் செய்யவேண்டும்."
"மகனே! உன் உள்ளம் எனக்குத் தெரியாதா? உன் உத்தமமான குணம் எனக்குத் தெரியாதா! உன்னை என்ன செய்யச் சொல்லுகிறேன்—எதற்காக அதைச் செய்யச் செல்லுகிறேன். நமது குடும்பம் மீண்டும் நல்ல நிலைமையை அடையத்தான்."