பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகன்

21

"நான் யார் மகன் என்பதை வெளியே காட்டிக் கொள்ளாமல் உலவச் சொல்கிறீர்களே—உங்கள் கண் முன்னாலேயே! அதைவிடக் கொடுமை வேறு என்னப்பா இருக்க முடியும்?...என்னை வாட்டாதீர்களப்பா..."

"சொக்கலிங்கம்! நான் முறைப்படி தமிழ் படித்தவன் என்பது தெரியுமா உனக்கு? பாடம்கூட சொல்லிக் கொடுத்து இருக்கிறேன் — பணத்துக்காகக்கூட அல்லடா மகனே, பொழுது போக்குக்காக! ஜெமீன்தாரிடம் நான் அதைக் காட்டிக் கொள்கிறேனா! சடையா! ஆத்திசூடி தெரியுமா உனக்கு என்றுகூடக் கேலியாகக் கேட்பார் ஜெமீன்தாரர்; 'எனக்குங்களா! நான் என்னத்தைக் கண்டேன்!' என்று சொல்லுவேன்."

"ஏனப்பா! ஏன் மறைக்க வேண்டும்? சொன்னால் என்ன, எனக்குத் தமிழிலே நல்ல பயிற்சி உண்டு என்று"...

"சொல்லலாமடா மகனே! சொல்லலாம். நமது குடும்பம் நொடித்துப் போகாமலிருந்தால் சொல்லலாம். ஆனால் நான் சொல்லலாமா! நான் யார்? வாழ்ந்து கெட்டவன். நல்லது கெட்டது தெரியாமல் நடந்து கொண்டதால் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டவன். நான் போய் ஜெமீன்தாரரிடம் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் தெரியும்; அகவல் அருணாசலப் புலவரிடம் ஆறு வருடம் பாடம் கேட்டிருக்கிறேன் என்று சொல்லுவதா?"...

"சொன்னால் என்னப்பா என்றுதான் கேட்கிறேன்."

"சொல்லிவிட்டு, பைத்தியக்காரா! போதும் நீ தமிழ் படித்த பெருமையைப் பற்றிக் கதை அளப்பது. போ! போ! குதிரைகளுக்குத் தண்ணீர் காட்ட வேண்டிய நேரம் இது. அந்த வேலையை ஒழுங்காகச் செய்யாமல், நீ படித்த அகவலின் பெருமைபற்றி அளந்து கொண்டிருக்காதே! இப்போது உனக்குச் சோறு போடுவது உன்னுடைய அகவல் அல்ல; நம்ம குதிரைகள்! என்று சொல்லிவிட்டு இடிஇடியெனச் சிரிப்பார். மகனே! நான் இப்போது வண்டி ஓட்டி!! வண்டிக்காரனடா, வண்டிக்காரன்!"