பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வண்டிக்காரன்

"என் அப்பா! என்னைப் பெற்ற பெருமான்! எனக்கு உயிரும் உடலும் உதிரமும், கொடுத்த உத்தமர்."

"அப்படி நீ சொல்லி, நான் கேட்டு மகிழ காலம் வரவில்லை அப்பா! இது அல்ல அந்தக் காலம். நான் வண்டிக்காரன்! நீ புதுவாழ்வு பெறவேண்டியவன்; என் மகன் என்று தெரிந்தால்—வண்டிக்காரன் மகன் என்று தெரிந்தால், உனக்குப் புதுவாழ்வு கிடைக்காது..."

"பயங்கரம் மூட்டும் பேச்செல்லாம் பேசுகிறீர்களே அப்பா!"

"விவரத்தை வளர்த்துக் கொண்டிருக்க நேரமில்லை. உன் மனதிலே என்னென்ன தோன்றும் என்பதைப் பற்றியெல்லாம் நன்றாக யோசித்துப் பார்த்து, என் மனதிலே ஏற்பட்ட கொந்தளிப்பையும் அடக்கிக்கொண்டு, அதற்குப் பிறகே நான் இந்த முடிவுக்கு வந்தேன். நீ ஜெமீன் ஜம்புலிங்க பூபதியின் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வேலையிலே சேர்ந்துவிட வேண்டும். அவர்கள் எதிர்பார்க்கும் யோக்யதாம்சம் அவ்வளவும் உன்னிடமிருக்கிறது. உன்னிடம் உள்ள ஒன்றே ஒன்றுதான், உனக்கும் வேலைக்கும் நடுவே நிற்கிறது, தடைக்கல்லாக. நீ என் மகன்—வண்டிக்காரன் மகன் என்பதுதான் குறுக்கே நிற்கிறது. வண்டிக்காரனுடைய மகனை, ஜெமீன் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டார் பூபதி! பிள்ளைகளோடு மாளிகையில் தங்கியிருக்க வேண்டும்; அங்கேயே சாப்பாடு, ஜாகை எல்லாம். எப்போதும் பிள்ளைகளுடன் இருந்து வரவேண்டும். ஜெமீன் குடும்பத்துடன் பழகும் நிலை! அந்த நிலையை மகனே! ஒரு வண்டிக்காரன் மகன் பெறமுடியாது—தரமாட்டார்கள்; ஆனால் நீ அந்த நிலையைப் பெற்றே ஆகவேண்டும். அங்கு இடம் பெற்றுக் கொண்டால், நீ முன்னேறுவதற்கான படிக்கட்டுகள் வேகமாக அமையும். நல்ல நிலை—மதிப்பான உத்தியோகம் கிடைக்கும்—கண்குளிரக் காணுவேன், தம்பி! நோயைப் போக்கிக்கொள்ள கசப்பான மருந்துகூடச் சாப்பிடவேண்டி வந்துவிடுகிறது அல்லவா! அது இது. கண்ணிலே