பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வண்டிக்காரன்

உலாவ அழைத்துச் செல்வதைக் கண்டான். நெஞ்சு பகீரென்று ஆகிவிட்டது. ஓடிச் சென்று அவர் காலில் விழ வேண்டும் போலத் தோன்றிற்று. 'அப்பா! அப்பா!' என்ற சொல் வேகவேகமாகக் கிளம்பிற்று; சடையப்பன் பார்த்த பார்வையால் வார்த்தைகள் வெளியே வரவில்லை. சொக்கலிங்கத்தைப் பார்க்காதவனைப் போலச் சடையப்பன் வெளியே சென்றான்.

ஜெமீன்தாரர் ஜம்புலிங்க பூபதி, மிகுந்த செல்வாக்குப் படைத்தவர். ஆங்கில அரசுடன் உறவு கொண்டாலன்றி நமது ஜெமீன் வாழ்வு நிலைக்காது என்பதை உணர்ந்து நடந்து கொண்டவர். ஆனால் அதே நேரத்தில், ஜெமீன்தார் என்பதற்கு உரிய மதிப்பு கெடக்கூடாது என்பதிலேயும் கண்ணுங் கருத்துமாக இருந்தவர்.

மற்ற ஜெமீன்தாரர்களைப்போல, குடிமக்களைக் கசக்கிப் பிழிந்தும் கொள்ளை அடித்தும் பொருள் சேர்த்தால் மட்டுமே போக போக்கியத்தில் மூழ்கி இருக்கலாம் என்ற நிலையில் அவர் இல்லை. ஜெமீன் வருமானத்தைவிட அதிக அளவு அவர் வியாபார மூலம் பெற்றுக் கொண்டு வந்தார். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய பண்டங்கள், குறிப்பாகப் புகையிலை, நிலக்கடலை ஆகியவை அவருடைய ஜெமீனில் போதுமான அளவு இருந்தது. சீமைக்குச் சென்று வியாபாரக் கம்பெனிகளுடன் தொடர்பும் ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருந்தார்.

விசேஷ தினங்களில் தவிர மற்ற நேரத்தில் ஆங்கில முறை உடுப்புடன்தான் உலவுவார். நவராத்திரி போன்ற சில விசேஷ நாட்களில் மட்டும் ஜெமீன் உடையுடன் உலா வருவார்.

ஜெமீன் மாளிகை, பழைய கம்பீரமான தோற்றத்துடன் இருந்தது. கொடிமரம்! காவலாட்கள் தங்கும் இடம்! வண்டிப் பட்டை தனியாக! சிறிய கோபுர அமைப்பில், நழைவு வாயில். அதிலே கலசம், சித்திரங்கள், சித்திர வேலைப்பாடுகள்!