பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வண்டிக்காரன்

நீங்கள் வண்டி ஓட்டிக்கொண்டு செல்கிறீர்கள்; நான் அவர்களுடன் உள்ளே உட்கார்ந்து கொண்டு வருகிறேன்! என்ன கொடுமை! என்ன கொடுமை!

அப்பா! நான் இருக்கும் பக்கம்கூட வருவதற்கு உமக்கு அனுமதி இல்லையே! என் எதிரிலேயே கூனிக் குறுகி நிற்கிறீரே, மாளிகைக்கு வருபவர் முன்.

எத்தனை முறை துடித்திருக்கிறேன்; இனியும் சகித்துக் கொள்ள முடியாது. அப்பா, அப்பா! என்று கூவிக்கொண்டே உன் காலடி விழவேண்டும். அம்மா! அம்மா! என்று அழுதுகொண்டே உத்தமியின் பாதத்தை வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது. முடியவில்லையே! கூடாது என்று கட்டுப்படுத்தி விட்டீர்களே! கிராதகனாக இரு என்று கட்டளையிடுகிறீர்களே! இதயத்தை வெளியே எடுத்து வீசி விடு. மிருகமாகி விடு—என்று உத்திரவிட்டு விட்டீர்களே!...

அப்பா! நான் இங்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறேன் குழந்தைளுக்கு; 'நீங்கள் வணங்க வேண்டிய முதல் தெய்வம் தாய்!'—என்று. என் தாய் அங்குத் தலைவிரி கோலமாக நிற்கக் காண்கிறேன். என்ன ஒரு மாதிரி இருக்கிறீர்கள்? தலைவலியா! என்று கேட்டு உபசாரம் செய்கிறார்கள் எனக்கு!

என்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன் என்கிறீர்களே! நாலுபேர் எதிரிலே என்னைக் கண்டால் வணங்குகிறீர்களே, ஐயோ! அதைவிட வேதனை இருக்க முடியுமா அப்பா!

ஏன் இந்த வேதனை? எத்தனை நாளைக்கு? இவ்வளவு நேசம் காட்டுகிறாரே ஜெமீன்தாரர், இப்போது உண்மையைச் சொன்னால் என்னப்பா?

வெளியே உலவப் போகிறேன் என்றால், ஜெமீன்தாரர் 'ஏன் அந்தச் சோம்பேறியை வண்டி கொண்டுவரச் சொல்வதுதானே! ஏன் நடந்து போகவேண்டும்?' என்று கேட்கிறார்.