38
வண்டிக்காரன்
"கோகிலா! இப்படித்தான் இருக்கவேண்டும். இவருடைய தகப்பனார், பெரிய ஜெமீன்தாரர். இவர் ஒரே மகன்! தாயார் இறந்துவிட்டார்கள். அந்தப் பெரிய ஜெமீன்தாரர், இரண்டாந்தாரமாக எவளையோ திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதைக் கண்டு கோபித்துக் கொண்டு, 'எனக்கு இந்த ஜெமீனே வேண்டாம். இந்தப் பெரிய உலகத்தில் ஜெமீன்தாரர்கள் மட்டுமா இருக்கிறார்கள். உழைக்கத் தெரிந்தவர்கள் யாரும் வாழ முடியும். நான் செல்கிறேன். என்னை மறந்துவிடுங்கள், என்றெல்லாம் ஆத்திரமாகப் பேசிவிட்டு இவர் கிளம்பிவிட்டிருக்கிறார். இவருடைய இந்த இரகசியத்தை அப்பா எப்படியோ தெரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் இவரை, ஜெமீனிலே வாத்தியார் வேலை பார்க்க வரும்படிக் கூறி அழைத்து வந்து வைத்திருக்கிறார். தக்கசமயமாகப் பார்த்துக் கூற வேண்டியதை அப்பா கூறப்போகிறார், பாரேன்!" என்று ஆவல் ததும்பத் ததும்ப உமா கூறினாள்.
'ஐயோ! அப்படி இருந்து விட்டால் என்கதி என்ன ஆவது? நான் எண்ணிடும் எண்ணங்கள் எப்படி ஈடேற முடியும்' என்ற ஏக்கத்துடன் கோகிலா உமா கூறுவதைக் கேட்டுக் கொண்டாள்.
மாறுவேடத்திலே உலவும் ஜெமீன்தாரர் இந்தச் சொக்கலிங்கம் என்ற எண்ணத்தை உமா தருவித்துக் கொண்டதும், அவள் கண்முன் இன்பமயமான எதிர்காலமே தெரியலாயிற்று.
ஜெமீன்தாரரின் அன்புக்கட்டளை காரணமாக சொக்கலிங்கம் விதவிதமான உடை உடுத்துக் கொள்வதையும், ஜெமீன்தாரரிடம் பழக வருபவர்களிடம் மிகத் திறமையுடன் பல பொருள்பற்றி அழகாகப் பேசுவதையும் உமா பார்த்தும் கேட்டும், மிகுந்த பூரிப்படைந்து வந்தாள்.
இதே காரணமாகக் கோகிலா கிலி கொண்டிருந்தாள்.
ஆனால், உமாவின் கண்களுக்குத் தெரியாத ஒரு காட்சி கோகிலாவுக்குக் கிடைத்தது—அவள் துளியும் எதிர்பாராத நிலையில்.