பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வண்டிக்காரன்

தனை துணிச்சல் உனக்கு. அடே! உன் போக்கிரித்தனம்கூட இருக்கட்டும்; எவ்வளவு கல்மனம் உனக்கு. பெற்ற தாயையும் தகப்பனையும் இங்கே கேவலமான பிழைப்பு நடத்த விட்டுவிட்டு, துளிகூட ஈவு இரக்கம், பற்று பாசம் இல்லாமல் நீ சீவிச் சிங்காரித்துக் கொண்டு கோலாகல வாழ்வு நடத்திக் கொண்டிருந்தாய். உன் போக்கைக் கண்ட அந்தக் கிழவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? உன் தாய், அங்கே குதிரைச் சாணியை எடுத்துப் போட்டு கொட்டிலைச் சுத்தப்படுத்திக் கொண்டிருப்பது—நீ ஜெமீன் கட்டிலில் சாய்ந்துகொண்டு சுகம் அனுபவிப்பது. ஒரு கணமாவது எண்ணினதுண்டா, இந்த ஈனத்தனத்தைப் பற்றி? தாயையும் தகப்பனையும் கேவலப்படுத்தத் துணிந்த உன்னை மனித இனத்திலேகூடச் சேர்க்கக்கூடாதே. சமுதாயமே பாழாகிவிடும் உன்போன்றவர்களால். உன்னை உயிரோடு விட்டு வைப்பதாக இல்லை. ஆமாம், என்னை வஞ்சித்தவனை நான் வாழ விடுவதில்லை..." என்று ஜெமீன்தாரர் ஆத்திரம் மேலிட்டுக் கூச்சலிடுவதும், அவர் எந்த விநாடியில் உத்திரவிடப் போகிறார் என்று காத்துக் கொண்டு அடியாட்கள், கம்பு கட்டாரியுடன் சூழ நிற்பதையும் கண்டு, சொக்கலிங்கம் அலறித் துடித்தெழுந்து 'செ! என்ன பயங்கரமான கனவு' என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

தான் நடத்திக் கொண்டிருக்கும் போலி நாடகத்தின் குட்டு உடைபட்டுப்போய் விட்டால் என்னென்ன ஆபத்துக்கள் வெடித்துக் கிளம்பக்கூடும் என்பதை சொக்கலிங்கம் எண்ணிப் பார்ப்பதுண்டு, சில சமயங்களில். ஆனால் இது போன்ற பயங்கரமான கனவுகள் கண்டதில்லை.

அன்றிரவு அந்தப் பயங்கரமான கனவு கண்டதற்குக் காரணம் அன்று மாலை, துளியும் எதிர்பாராத வகையிலே ஆப்பக்காரி அன்னத்தைக்கண்டு திடுக்கிட்டுப் போனதுதான்!

ஜெமீன் மாளிகைக் கொத்தனாருடன் குலவிக் கொண்டு அன்னம், ஜெமீன் குலதெய்வத்துக்கு நடத்தப்படும் திருவிழாவில் கலந்து கொண்டிருக்கக் கண்டு திடுக்கிட்டுப் போனான்.