பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகன்

41

அன்னம், விதவை. தவறான நடத்தை அற்றவள்; ஆப்பக்கடை நடத்திக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வருபவள் என்ற நல்ல பெயர் பெற்றவள். அவள் இப்படி! அவளுக்கு இப்படி கள்ளக்காதல்! இதிலே கிடைக்கும் பணம்தானா, காவேரியின் கழுத்திலே தங்கச் சங்கிலியாயிற்று? இப்படி எண்ணிப் பதறி, தன் குட்டை உடைத்து விடுவானோ என்று அன்னம் பதறினாள்.

தன் குட்டை அவள் எங்கே உடைத்துவிடுகிறாளோ என்று அவன் அஞ்சினான்.

கொத்தனார் மெள்ள அந்த இடத்தைவிட்டு நழுவி விட்டார்.

தயங்கித் தயங்கி அன்னம் சொக்கலிங்கத்தைக் கண்டு, கண்களைக் கசக்கியபடி, "தம்பி! என்னமோ என் தலைவிதி இப்படி ஆகிவிட்டது. என்னைக் கண்டுவிட்டதை நம்ம ஊரிலே யாரிடமாவது நீ சொல்லிவிட்டால், என் மானம் மரியாதை யாவும் போய்விடும். நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும். உன் காலில்கூட விழுந்து கேட்டுக் கொள்கிறேன்" என்றாள்.

தனக்குப் பேராபத்து வந்துவிடப் போகிறது என்று அஞ்சிக் கிடந்த சொக்கலிங்கம், அன்னம் தன்னைக் கண்டு பயப்படுவது கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் திகைத்தான்.

"யாரம்மா நீ?" என்று வியப்புடன் கேட்பதுபோல் வினவினான்.

"தம்பி! என் நடத்தையைக் கண்டதால்தானே யார் நீ என்றே என்னைக் கேட்டுவிட்டாய். எனக்கு இதுவும் வேண்டும், இதற்கு மேலும் வேண்டும்" என்றாள் அன்னம்.

"நீ யாரோ எனக்குத் தெரியாது. நான் கண்ணால் கண்டதை யாரிடமும் கூறப்போவதில்லை. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. நான் இருக்கும் இடத்தில் அந்த ஊரிலேயே அந்த வட்டாரத்திலேயே நீ இருக்கக் கூடாது" என்றான் சொக்கலிங்கம்.