பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வண்டிக்காரன்

"இந்தப் பாவியைக் கண்ணாலே பார்ப்பதுகூடப் பாவம் என்று நினைத்துத்தானே அப்படிப் பேசுகிறாய். என் நடத்தை உனக்கு எப்படியோ தெரிந்துவிட்டதாலேதான், காவேரியையும் கல்யாணம் கட்டிக்கொள்ள மறுத்தாய் என்பது இப்போது புரிகிறது. நாம் செய்கிற காரியம் யார் கண்ணிலும் படாது என்று எண்ணிக் கொண்ட நான் ஒரு முட்டாள். பாரேன்! ஆண்டவன் உன்னை இன்றையத் தினமாகப் பார்த்து இங்கே அனுப்பி வைத்தார்...நீ சொல்கிறபடி நான் செய்கிறேன்...இப்போதே இந்த ஊரைவிட்டுப் போய் விடுகிறேன். அவலூரிலும் இருக்கப் போவதில்லை...கோலாருக்கே போய் விடுகிறேன்...இந்த விஷயத்தை மட்டும் யாரிடமும் சொல்லிவிடாதே...காவேரியை ஒருவரும் கட்டிக் கொள்ள முன்வரமாட்டார்கள்...இந்தப் பாவிக்காக மனம் இரங்காவிட்டாலும், அந்தப் பெண்ணுக்காகவாவது இரக்கம் காட்டு தம்பி!" என்று கெஞ்சினாள்.

"ஆகட்டும்! நீ முதலில் உடனே இந்த ஊரைவிட்டுக் கிளம்பு" என்று கண்டிப்பான குரலைத் தருவித்துக் கூறிவிட்டு, "உன்னை இங்கு பார்த்ததை நான் மறந்துவிடுகிறேன். அதுபோலவே என்னை இங்குப் பார்த்ததை நீ மறந்துவிடு! யாராவது, என்னைப் பார்த்து இந்த அம்மாளைத் தெரியுமா என்று கேட்டால், 'தெரியாது' என்று நான் கூறிவிடுகிறேன். அதுபோலவே நீயும் என்னைப் பற்றிக் கேட்டால் சொல்லிவிட வேண்டும்" என்று உத்திரவு பிறப்பிப்பது போலப் பேசி அன்னத்தை ஊரைவிட்டே அனுப்பி விட்டு, "அப்பாடா! வர இருந்த ஆபத்திலே இருந்து தப்பினோம்" என்று எண்ணிக் கொண்டான். ஆனால் அதே எண்ணம், அதன் விளைவாக அந்தப் பயங்கரமான கனவு!!

கனவிலே காணும்போதே இவ்வளவு பயங்கரமாக இருக்கிறதே, உண்மையிலேயே கபட நாடகம் வெளியாகி விட்டால் ஜெமீன்தார் எப்படியெல்லாம் சீறுவார்—என்னென்ன தண்டனைகளைத் தருவார் என்பதை எண்ணும்போது சொக்கலிங்கத்துக்கு உடலே வெடவெடவென ஆயிற்று, கனவே பரவாயில்லை என்று தோன்றிற்று.