பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வண்டிக்காரன்

"கோகிலா! எனக்கு அவர் ஏற்றவர்தானா—இது பொருத்தமான சம்பந்தமா என்பதுதான் முக்கியம். நான் பெண்ணாகப் பிறந்தது எதற்கு? ஜெமீனுடைய பெருமையை பாழாக்கிக் கொள்ளவா! காதல், அன்பு, பாசம், பரிவு, பற்று, ஆவல், ஆசை என்று என்ன பெயரிட்டு வேண்டுமானாலும் அழைத்துக் கொள். எனக்குத்தேவை, கண் மூடித்தனமான காதல் அல்ல! என் தகப்பனார் கண் கலங்காமல், அவருக்குத் துளியும் தலை இறக்கம் ஏற்படாத விதமான சம்பந்தம். அதற்கு ஏற்ற பொருத்தம் இவருக்கு இருந்தால், நான் பாக்கியசாலி! ஆனால் அவர் சாமான்யர் என்பது உண்மையாகிவிட்டால், நான் அவரை மறந்துவிட வேண்டியது தான்."

"அவர் ஜெமீன் குடும்பம் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்—அப்போது..."

"அவருக்கு ஏற்றவளை அவர் அடைவார்; எனக்குத் தகுதியான மாப்பிள்ளையை அப்பா தேடித்தருவார்."

"அவர் உங்களைப் பரிபூரணமாக நம்பிக் கொண்டிருக்கிறார்...என்று வைத்துக் கொள்ளுங்கள்."

"அது அவர் செய்திடும் தவறு...நானா அதற்குப் பொறுப்பு...ஜெமீன் மாளிகையிலே இருந்து வருகிறாரே, இங்கு உள்ள நிலைமை, ஏற்படும் எண்ணம், மனப்பான்மை இவைகளை அவர் தெரிந்து கொள்ளாமலா இருந்திருப்பார், படித்தவர்."

"அப்படியா அம்மா! மெத்த சந்தோஷம்..."

"இதில் உனக்கு என்னடி சந்தோஷம்..."

"ஐயோ, நீங்கள் தப்பாக அர்த்தம் செய்து கொண்டீர்களே. நான் சொல்ல வந்தது, வேறு சில பெண்களைப்போல காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி, இளைத்து, களைத்து எலும்புருவாகிப் போய்விடச் செய்யும் காதல் உங்களைப் பிடித்துக் கொண்டதோ என்னமோ என்று பார்த்தேன். அப்படி இல்லை என்பது புரிந்துவிட்டது. அதனால் மகிழ்ச்சி என்றேன்."