மகன்
53
"கல்லாவது மண்ணாவது...கீழே விழுந்தால்கூட நமக்கு ஒன்றும் ஆகாது...இது என்ன ஓட்டை உடம்பா...வா, மிஸ்டர் லிங்கம்...ஏதாவது பழரசம் சாப்பிட வேண்டும் போல இருக்கிறது."
அன்றிரவெல்லாம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறான் சொக்கலிங்கம்.
என் எதிரில் என் அப்பாவை இழிவாக நடத்துகிறார் ஜெமீன்தாரர்.
என் எதிரில் என் அப்பா இடறிக் கீழே விழுகிறார்; அவரைத் தூக்கி நிறுத்தும் பாக்கியம் எனக்கு இல்லையே!
என் காதைத் துளைப்பது போலல்லவா ஜெமீன்தாரர் பேசுகிறார். காயம் பட்டால் என்ன, களிமண் வைத்துக் கட்டினால் போதும் என்று.
அவர்மீது என்ன குற்றம்! அவர் வண்டிக்காரனைப் பற்றிப் பேசுவதாக எண்ணிக் கொண்டுதானே பேசுகிறார். அந்த வண்டிக்காரர் என் தகப்பனார் என்பதைத் தெரிந்தா? இல்லையே! நான் தான் அதை மூடி மறைத்துவிட்டேனே, நான் உல்லாச புருஷனாக உலவ! என்னை உலகம் மன்னிக்குமா? என் உள்ளமே என்னைச் சுடுகிறதே—என்றெல்லாம் ஏங்கினான். வேதனை நாளுக்கு நாள் வளர்ந்தது; வெளியே சொல்ல முடியாததால், வேதனை இதயத்தையே பிய்த்துத்தின்னத் தொடங்கிற்று.
எத்தனை நாள்? இன்னும் எவ்வளவு காலம் இந்த நெருப்பாற்றிலே வீழ்ந்து தவிப்பது?
ஜெமீன்தாரரோ, வேறு எந்த வேலைக்கும் சொக்கலிங்கம் செல்ல அனுமதிக்க மாட்டார் போலத் தெரிகிறது. இலேசாக ஒரு எண்ணம் அவருக்கு அரும்புவதுகூடத் தெரிகிறது சொக்கலிங்கத்துக்கு.
உமாமகேஸ்வரியைத் தனக்குத் திருமணம் செய்து வைக்கும் எண்ணம்.