54
வண்டிக்காரன்
"எல்லாத் தகுதிகளும் இருக்கிறது, மிஸ்டர் லிங்கம்! பெற்றோர் பற்றி ஒரு தகவலும் சொல்ல மாட்டேன் என்கிறீரே ஏன்?" என்று அடிக்கடி கேட்கிறார்.
பெற்றோரா! அதோ தோட்டத்தில்! உங்கள் வண்டிக்காரர்! என்று சொன்னால் போதும்; உள்ளபடி ஜெமீன்தாரரின் மண்டையே வெடித்துவிடும்—என்ற நிலைமை. இதுவும் புரிந்தது சொக்கலிங்கத்துக்கு.
சொக்கலிங்கம் அறியாமல், அவன் நடவடிக்கைகளைக் கவனிக்கத் தொடங்கிய கோகிலாவுக்கு மெள்ள மெள்ள ஒரு சந்தேகம் வளர்ந்தது. வண்டிக்காரன் குடிசைக்கு அவன் செல்வது ஏழை எளியோரிடம் உள்ள பரிவு காட்டும் காரணத்தால் அல்ல; வேறு ஏதோ ஒரு பந்தம்—பாசம்—அவனை அங்கே இழுத்துச் செல்கிறது என்ற சந்தேகம்.
அவன் செல்லாத நேரமாகப் பார்த்து அதே குடிசைக்கு அவள் சென்று பேசிக் கொண்டிருக்கும் பழக்கத்தை உண்டாக்கிக் கொண்டாள்.
முதலிலே அவளிடம் தாராளமாகப் பேசத் தயங்கிய சொர்ணம், மெள்ள மெள்ள விவரம் பேச ஆரம்பித்தாள்.
விவரம் கூறுவதற்குப் பதிலாக, கோகிலத்திடம் சொக்கலிங்கத்தைப் பற்றிய பல விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.
சொக்கலிங்கத்தைப் பற்றிய விவரம் எதைச் சொல்லும் போதும், சொர்ணம்மாளின் கண்களிலே கனிவு வழிந்தது; பேச்சிலே பாசம் ததும்பிற்று.
நேரடியாகவே கேட்டு விடலாமா என்று கூடக் கோகிலா நினைத்தாள். பிறகு அது தவறாக முடியும் என்று அஞ்சி விட்டுவிட்டாள். வேறு முறையைக் கையாண்டாள்.
குளிர் காற்று வீசும் நாட்கள். பலர் அந்தக் காற்றிலே அடிபட்டு, காய்ச்சலால்கூடத் தொல்லைப்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.