பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வண்டிக்காரன்

"மிஸ்டர் நார்மன்! உண்மை பேசுவதை நீங்கள் வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எங்கள் நாட்டிலே வந்திருப்பது நாகரிகத்தைப் பரப்ப என்ற பேச்செல்லாம் பசப்பு என்பது உங்களுக்கே தெரியும். வியாபாரக் கொடி முதலில்! அதைத் தொடர்ந்து அரசியல் கொடி! அவ்வளவுதான். நாகரிகம் பரப்ப வந்தோம் என்பதெல்லாம் உண்மை அல்ல..."

"நாங்கள் வந்ததால் எத்தனையோ புதுப்புது முறைகள் உங்களுக்குக் கிடைக்கவில்லையா?"

"கிடைத்துள்ளன. அதுபோல உங்களுக்குப் பல நாகரிகச் சாதனங்கள் வேறு நாடுகளிலே இருந்து கிடைக்கவில்லையா? மேற்பூச்சான நாகரிகமாக இருந்தாலும்சரி, புதுக் கருத்துப் புரட்சியைக் காட்டுவதாக இருந்தாலும், அவை காலம் தருவது; எந்த ஒரு நாடும் தருவது அல்ல."

"மிஸ்டர் லிங்கம்! அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் இதை ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நீங்களாக நாடி, தேடி, நாகரிகத்துக்கான முறைகளை உண்டாக்கிக் கொள்ளவில்லை."

"நாகரிகம் என்பதற்கு நம்ம ஜெமீன்தாரரின் ஆடம்பர உடையும், அவருடைய மருகர் பருகும் பானங்களும், ஜெமீன் சீமாட்டிகள் வாசிக்கும் பியானோவும்தான் அடையாளம் என்று கூறத்துணிகிறீர்களா மிஸ்டர் நார்மன்? இவைகளெல்லாம் புறத்தோற்றங்கள். உங்களுடைய நாட்டிலேயே நடை உடை பாவனைகளில் எத்தனையோ விதமான, மாறுதல்கள் ஏற்பட்டன. உங்கள் எலிசபெத் மகாராணியார் காலத்து உடை! ஏ, அப்பா! இப்போதுள்ள இங்கிலீஷ் பெண்களுக்கு எவ்வளவு அருவருப்பாக இருக்கும், உங்கள் எட்டாவது ஹென்றி செய்துகொண்ட கோலாகலத்திருமணங்களும், ஒவ்வொரு மனைவியையும் தேம்ப விட்டதும் திண்டாட விட்டதும்! இப்போதுள்ள ஆங்கில நாட்டு இளைஞர்களை வெட்கித் தலைகுனியச் செய்யுமே."

"ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நாங்கள் சேற்றிலே அமிழ்ந்துவிடுவதுபோல இருந்துவிடவில்லை—"