பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வண்டிக்காரன்

"உள்ளதைச் சொன்னால் எங்கே கொந்தளிப்பு ஏற்பட்டு விடுமோ! நம்முடைய ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணிச் சும்மா இருக்கிறீர்கள் மிஸ்டர் நார்மன்! சுரண்டிக் கொண்டு போகிறவரையில் இலாபம் என்ற நோக்கத்துடன்—உண்மைதானே?"

ரகசியத்தைத் தான் தெரிந்து கொண்டிருப்பதைச் சொக்கலிங்கத்துக்குப் படும்படியாக செய்துவிட வேண்டும் என்ற ஆவல் கோகிலாவை வாட்டியபடி இருந்தது. ஒரு நாள் அதையும் ஜாடையாகக் கூறுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. உமா அந்த வாய்ப்பை உண்டாக்கி வைத்தாள் — தனக்காக என்று எண்ணிக்கொண்டு.

சொக்கலிங்கம் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும்போது கூடத்தின் மற்றோர் பக்கமாக உலவிக் கொண்டே உமா கூறினாள்: "கோகிலா! நான் படித்து முடித்த கதை மிகச் சுவையானது. அதிலே வருகிற கதாநாயகன், ஒரு சிற்றரசன்! ஆனால் தனக்குப் பிடித்தமில்லாத பெண்ணைத் தன் தலையில் கட்டிவிடுவார்கள் என்ற பயம் காரணமாக, தனக்கு மூளைக் கோளாறு இருப்பதாக நடித்துக் கொண்டிருக்கிறான்..." என்றாள்.

"ஆமாமம்மா! ஆனால் அந்தவிதமான தந்திரம் கடைசிவரையில் பலன் தருவதில்லை" என்றாள் கோகிலா.

"தெரியாமலா சொன்னார்கள்—கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள்" என்று கூறிக்கொண்டே உமா சிரித்தாள்.

"எவ்வளவுதான் தங்களை மறைத்துக்கொண்டு உலவினாலும், இரகசியம் ஒருநாள் இல்லாவிட்டால் மற்றோர் நாள் வெளிப்பட்டுப் போகமலா இருக்கும்" என்று சிறிதளவு மிரட்டும் குரலிலேயே பேசினாள் கோகிலா.

"ஏதேது! பெரிய இரகசியத்தை எல்லாம் கண்டு பிடித்விடக்கூடிய சாமர்த்தியக்காரிபோலப் பேசுகிறாயே!" என்று கேட்டாள் உமா!