62
வண்டிக்காரன்
தான் அறிந்த உண்மையை அப்போது சொல்லிவிட வேண்டும் என்று கோகிலா துடியாய்த் துடித்தாள். யாரோ இருமும் சத்தம் கேட்டது. சொக்கலிங்கம் சற்றுத் தொலைவிலே இருந்து கொண்டு, 'அமைதியாக இரு' என்று ஜாடை காட்டுவதைக் கண்டாள்.
மானேஜர், தன் குடும்பத்துடன் ஜெமீன் கிராமத்தை விட்டுப் புறப்பட்டுப் போக ஏற்பாடாகி விட்டது. ஜெமீன்தாரருடைய பெட்டி வண்டியே மானேஜர் ரயிலடி செல்லத் தரப்பட்டது. சிபாரிசுக் கடிதம்கூடக் கொடுத்திருக்கிறார். சீரானூர் ஜெமீனுக்கு என்று வேலையாட்கள் பேசிக் கொண்டனர்.
விடிந்ததும் சென்றாக வேண்டுமே என்ற கவலை குடையும் மனதுடன், கடைசியாக ஜெமீன் தோட்டத்தைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் கோகிலம்.
எப்படியாவது சொக்கலிங்கத்தைப் பார்த்துவிடலாம் என்ற ஆவல்தான், உண்மையான காரணம்.
சொக்கலிங்கமும் அதே மனநிலையில் அவன் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருந்தான். அவன் நெஞ்சத்திலே அவளைப் பற்றிய நினைவுதான்!
அவள் வரக்கண்டான்! தாவிச் சென்று அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு, தோட்டத்தின் கடைசிப் பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
காற்றடித்தது; பூக்கள் உதிர்ந்தன!
எங்கோ குயில் கூவிடும் இனிய நாதம் கேட்டது.
சொக்கலிங்கம், கோகிலாவின் கண்களைத் துடைத்த படி, "திருமண வேளையில் கண்ணீர் பொழியலாமா?" என்று கேட்டான்.
"நமக்குத் திருமணமா? உண்மையாகவா? ஏதாவது கனவா?" என்று தழதழத்த குரலில் கோகிலா கேட்டாள்.