பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகன்

67

அல்ல. உடனே ஓடிச் சென்று காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு எல்லோருக்கும் வருவதில்லை; இருப்பதில்லை. மிஸ்டர் லிங்கம் பண்பாளர்; நற்குடி பிறந்தவர். எப்போது கேட்டாலும் சொல்ல மறுக்கிறார், தமது பெற்றோர் யார் என்பதை. அவர் சொல்லத் தேவையே இல்லை. இன்றைய செயல் அவர் எப்படிப்பட்ட உயர்ந்த குடும்பத்தில் உதித்தவர் என்பதைக் காட்டிவிட்டது. இத்தகையவரை மகனாகப் பெற்ற தாய் வாழ்க! நீடூழி வாழ்க! அவளுக்கு என்னுடைய வணக்கம்!"

அப்போது வெளியே சென்று, வந்த காளிங்கராயர், "இடியட், சுத்த முட்டாள்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் இப்படித்தான்..." என்று கூறுகிறார்.

"என்ன இது, ரசமான கட்டத்தில் வந்து கெடுக்கிறீர். அப்பா எவ்வளவு உருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தார்.."

"பேசிக் கொண்டிருக்கட்டும் உருக்கமாக, சுவையாக..அவருடைய முட்டாள் வேலையாட்கள் குழந்தைகளை குதிரைக் காலின் கீழ் போடட்டும்."

"சின்ன ஜெமீன்தாரரை ஏன் குதிரை மிதிக்க வந்தது...விசாரித்தீர்களா..."

"யாரை விசாரிப்பது...குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் ஆயாவை கேட்டோம்...விளையாட்டு சாமான் கொண்டு வர உள்ளே போய் வருவதற்குள் இந்த விபரீதம் நடந்து விட்டதாம்."

"அவ்வளவுதான் சொன்னாளா அந்தக் கள்ளி...இதுகள் இந்த வேலைக்கார கழுதைகள் ஒரே கூட்டு. ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதில்லை. ஒப்பந்தம், நடந்தது அது அல்ல. இந்த ஆயா உள்ளே போனாள்..விளையாட்டுச் சாமான் கொண்டுவர அல்ல...புகையிலை எடுத்து வர..."

"புகையிலையா...யாருக்கு..."

"அப்படிக் கேளுங்கள்...அந்தக் கிழவி இருக்கிறாளே வண்டிகாரன் சம்சாரம் அவளுக்கு..."