பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

வண்டிக்காரன்

காளிங்கராயர் பிடிப்பட்டார்; வழக்குத் தொடரப்பட்டது.

அச்சம் பிடித்துத் தின்னத் தொடங்கிற்று, ஜெமீன்தாரரை.

நார்மனை நாடினார், காளிங்கராயரை மீட்பதற்காக.

"பிடிவாதம் வேண்டாம் மிஸ்டர். நார்மன்! பிடிவாதம் கூடாது. கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்."

"நான் எந்த உதவியும் செய்ய முடியாது. நடந்ததை அப்படியே கோர்ட்டிலே சொல்லத்தான் போகிறேன்...நம்முடைய வியாபாரத் தொடர்பு இருந்தாலும் சரி...அறுந்தாலும் சரி!"

"மிஸ்டர் நார்மன்! ஆத்திரத்தில் நடந்து விட்டது...எப்படியாவது..."

"நடந்திருப்பது கொலை, மிஸ்டர் ஜெமீன்தாரர்...நான் எப்படி உடந்தையாக இருக்க முடியும்...வண்டிக்காரனும் மனிதன், மிஸ்டர் ஜெமீன்தார், மனிதன்!"

"நீங்கள் மனது வைத்தால், என் மருமகன் தப்பலாம்...சாட்சிகளைத் தடுத்துவிட முடியும்."

"முடியும் ஜெமீன்தாரர்! முடியும். நான் அந்த நேரத்தில் அங்கு வராமலிருந்தால் பிணத்தையே மறைத்து விட்டிருக்கவும் முடியும். ஆனால் என்னால் உண்மையை மறைக்க முடியாது."

"பூர்வீகமானது எங்கள் ஜெமீன். இப்போதே கேவலமாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். மருமகனுக்கும் ஏதாவது கோர்ட்டிலே கிடைத்து விட்டால் இழிவு எந்தக் காலத்திலும் போகாது மிஸ்டர் நார்மன். இருபது வருட சினேகிதம் நமக்குள்".

"இருபது வருட வியாபாரத் தொடர்பு! மிஸ்டர் ஜெமீன்தாரர். சமுதாயத்திலே உள்ள போலி அந்தஸ்து