பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

புதிய

"வேலப்போய்! உன் கண்ணாலத்திலே ஊர்கோலம் உண்டா டோய்!" என்று கேலி செய்வார்கள், ஒத்த வயதினர். "ஆமாம்டா! செய்தா என்னடா! ஆனை மேலே அம்பாரி, குதிரை மேல் மேளதாளம், பொய்க்கால் குதிரை கூத்தாட்டம், எல்லாம் தான் நடக்கப் போவுது. பவுன், பவுனாய் விளையுது, என் கொல்லையிலே. நீங்களெல்லாம் தான், பழைய மாதிரியாகவே, காரும், சிறுமணியும் விதைத்துவிட்டு கிடக்கறிங்க, நான் 'குச்சிக்கிழங்கு' போட்டிருக்கறேன், தங்கமாட்டம் விலைபோகுது, குச்சிக் கிழங்கு தெரியுமா...தூரத்துச் சீமைக்கெல்லாம் வண்டி வண்டியாப் போகுது...அதிலே கிடைக்கப் போற காசைத்தான் நம்பிகிட்டு இருக்கறேன்...குச்சிக் கிழங்கு காசு ஆனதும் நாள் பார்க்க வேண்டியதுதான்..." என்று வேலப்பன் உற்சாகத்துடன் கூறுவான்.

நகரத்திலே ஒரு வேலையாக வேலப்பன் போயிருந்த போது 'குச்சிக் கிழங்கு' பயிரிடுவதாலே கிடைக்கும் இலாபத்தைக் குறித்து கடைவீதியிலே பேசிக் கொண்டதைக் கேட்டு, பிறகு பல பேரிடம் அதைப் பற்றிய விவரம் கேட்டுத் தெரிந்து கொண்டான். பிறகு குச்சிக் கிழங்கு பயிர் வைத்தான்...யாரோ வியாபாரிகூட, பயிர் வளமாக வந்த போது பார்த்துவிட்டு மாசூல் முழுவதும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுவதாக வாக்களித்தார். வேலப்பனுக்கு அதனாலே அதிக நம்பிக்கை ஏற்பட்டது.

செல்லாயியை அவன் சந்திப்பதென்பது, மாலை வேளைகளில் யாருமறியாமல் என்கிற விதத்தில் அல்ல.

கழனிப்பக்கம் இருவருக்குமே வேலை இருக்கும்—தோப்புத்துரவுக்கு இருவருமே போக வேண்டிய அவசியம் நேரிடும்; அப்போதெல்லாம் சந்திப்புதான்.

"தா! செல்லாயி! வாயேன், அதோ அந்தாலே இருக்கிற திருக்குளத்தண்டே, பூ பறிச்சுத்தாரேன். தாமரைப்பூ. அழகா இருக்கும்...."என்று அவன் சில வேளைகளில் அழைப்பான். அவன் கண்கள் வேறு ஏதேதோ பேசும். செல்லாயிக்கு சிரிப்பு வரும்; கோபமும் பயமும் வந்தவள் போலாகி "அம்-