பொலிவு
87
"நான் இருக்கிற இருப்புக்கு இப்ப கண்ணாலம் ஒண்ணு தான் குறைச்சல். எது எப்படிப் போனாலும் என்ன, என் பின்னோடு சுத்திகிட்டுத் திரி என்கிறாயா? தா! புள்ளே! என் எதிரே நின்னுகிட்டு இப்படி பல்லைக் காட்டாதே. நான் இருக்கிற ஆத்திரத்திலே எனக்கு அரிவா மேலேதான் கவனம் போவுது. அடி அம்மா! மவராசி! கொஞ்சம் உன்னோட அலுக்கு குலுக்கையெல்லாம் அடக்கி வைச்சிரு..." என்று ஏதாவது கோபத்திலே ஏசுவான் என்ற பயம் செல்லாயிக்கு. அதனாலே, அவனை அடிக்கடி சந்திப்பதைக் குறைத்துக் கொண்டாள்; பார்க்க நேரிடும்போதும், பழகாதவள் போல கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறிவிட்டு வந்து விடுவாள்.
"எல்லாம் இருக்கிறவரையிலேதான் மக்கமனுஷாள், சுற்றம் உறவு எல்லாம். பாரேன், இந்தச் செல்லாயியை; நாளைக்கு நாலு தடவையாவது ஓடியாந்து நச்சரிப்பா, இப்ப என்னடான்னா, பார்த்தும் பார்க்காத மாதிரியாப் போறா; பழகாதவ மாதிரியா நடந்து கொள்றா! பவுன் நகை இனி கிடைக்காது என்கிறதாலே, வேண்டா வெறுப்பாப் பேசறா. இவ்வளவுதான் இதுகளோட சுபாவம். நம்ம போறாத வேளை; இதுவும் நடக்கும், இதுக்கு மேலேயும் நடக்கும்" என்று வேலப்பன் எண்ணிக் கொண்டான். வேதனை மேலும் வளர்ந்தது.
ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக் கொள்ளாததாலேயே சந்தேகமும், சஞ்சலமும் இருவருக்கும் வளர்ந்தது. அதிக நாட்கள் இதை நீடிக்கவிடக்கூடாது, ஒரு நாளைக்கு அவளை வெட்டு ஒண்ணு துண்டு இரண்டாகக் கேட்டுவிட வேண்டியதுதான் என்று வேலப்பன் முடிவு செய்து, நாளைக்கு அந்த வேலைதான் முதலில் என்று எண்ணினான். அவனை அந்த வேலையைச் செய்யாவிடாமல் தடுத்திட, வேறோர் அவசர வேலை குறுக்கிட்டது.
"ஓட்டு" கேட்கறபோது, தினுசு தினுசான மோட்டாரிலே, இங்கே வந்து, கெஞ்சிக் கூத்தாடினானுங்களே, பெரிய மனுஷனுக! இப்ப பார்த்தாயா, கழனி காஞ்சி போனாலும்,