பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

புதிய

கிராமத்தைப் பார்த்துப் பார்த்து வெறிச்சென்று கிடக்கிறது. உழைப்பது தவிர வேறொன்றும் காணோமே, பட்டபாட்டுக்குப் பலன் கிடைக்கவில்லையே, இதை விட்டுத் தொலைந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். இங்கே ஒருவர்—அவரும் இளைஞராகத்தான் இருக்கிறார்—வாழ்க்கையில் வசதி உள்ளவர்—மலரே! மணமே! மடுவே! மாடே! ஏரே! எழிலே! என்று ஏதேதோ கூறி மகிழ்கிறார்!!

வேலப்பன் பெருமூச்செறித்தான்...

"கிராமத்துக் கவர்ச்சி, புகை கப்பிக்கொண்டு சந்தடி அதிகமாகிக் கிடக்கும் நகரத்திலே ஏது!"

"பணம் நிறைய இருக்கு அங்கே..."

"பணமா? ஆமாம், அது இருக்கிறது; ஆனால் பண்பு இங்கேதானப்பா இருக்கிறது..."

"என்னமோ போங்க, வேடிக்கையாகப் பேசறிங்க! உங்களிடம் இருக்கிறது எங்களிடம் இல்லையேன்னு நாங்க கிராமத்துக்காரரு கஷ்டப்படறோம்; நீங்க வேறே எதுவோ ஒண்ணு எங்களண்டை இருக்குன்னு சொல்லிப் புகழ்ந்து பேசறிங்க..."

"கண் இருக்க வேண்டியதுதானப்பா, ஆனா கண்ணாலே பார்க்க, நல்ல பொருள் இருக்க வேண்டுமல்லவா? பார்க்க பாம்பும் தேளும், படுகுழியும் நெருப்பு குண்டமும் தான் இருக்கிறது என்றால், கண் இருந்துதான் என்ன பயன்?"

"அது சரிங்க, ஆனா, பவுன் பவுனா கொட்டி இருக்கு, தினுசு தினுசா பண்டமிருக்கு, வகை வகையா அருமையான சாமான் இருக்கு, ஆனா இதை எதையும் பார்க்கக் கண் இல்லேன்னா, என்னாங்க பிரயோஜனம்?"

"ஆஹா. பாரேன், இதையே அங்கே படிப்பு இருக்கிறது புளியேப்பம் வருமளவுக்கு. ஆனால் இதோ இப்போது நீ பேசினியே, அந்தப் பக்குவம் அந்த நகைச்சுவை, அந்த அறிவு இருப்பதில்லையே..."

"நீங்க யாருங்க..."