பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

புதிய

ஏன் நம்மாலே முடியாது? என்று எண்ணிக் கொள்வான். அவன் உள்ளத்தில் ஓராயிரம் யோசனைகள் தோன்றித் தோன்றி ஒன்றோடொன்று மோதுவதாலே சில நொறுங்கிப் போயின; யோசனைகள் குழம்பிவிட்டன. யாராவது தக்கபடி யோசனை சொன்னால் மட்டுமே நல்லது என்று எண்ணிக் கொண்டான்.

'டவுன்' இதற்காக ஆளை வைத்துக் கொண்டில்லை? இதையே பெரிய தொழிலாகக் கொண்டவர்களை, அவன் தெரிந்து கொண்டதில்லை—அவனாலே கண்டுபிடிக்க முடியவில்லை—இவனைக் கண்டு கொள்ளவா அவர்களால் முடியாது. முதலில் மோப்பம் பிடித்தவன், முத்தையன்—மூலக்கடை முத்தையன் என்பது அவனுக்குப் பட்டப் பெயர். ஆனால், அவனுக்குக் கடை கிடையாது. மூலக்கடை, மூசா ராவுத்தருடையது. அங்கு எப்போதும் வட்டமிட்டபடி இருப்பான். அதனால் அந்த வட்டாரத்தினர், அவனுக்கு மூலக்கடை முத்தையன் என்று பெயரிட்டனர்.

முத்தையன் வழக்கப்படி நாலு நட்சத்திர பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு, புது வியாபாரத் திட்டமொன்றை மூசா ராவுத்தருக்கு விளக்கிக் கொண்டிருந்தான்.

"பத்து இருக்குமேல்லோ ராவுத்தரே வருஷம், நீ இங்கே வந்து? என்ன செய்திருக்கே இதுவரையிலே? பத்துப்பவுனிலே நகை செய்தாயே, அதுதானே..."

"அதுமட்டும் இப்ப இருக்குதா? பள்ளிக்கூடம் படிக்குது..."

"ஆமாம் மறந்துட்டேன்...இந்த ஆனைமார்க் அல்வாப் பொட்டலம் வாங்கி, எல்லாம் நாத்தமடிச்சு போயி, சாக்கடையிலே வாரிக்கொட்டிவிட்டாயே! அதிலே வந்த நஷ்டத்துக்குப் போய்விட்டதில்லை, மறந்துட்டேன். உனக்கு எங்கேய்யா, நம்ம பேச்சு ஏறுது? எந்தெந்தப் பயலோ புழைக்கிறான்; நான் சொல்ற ஏற்பாட்டைக் கச்சிதமாச் செய்து, நமக்கு வேண்டிய மனுஷராச்சேன்னு நான் உன்கிட்டே ஒவ்வொரு பிளானையும் சொல்லிக்கிட்டுத்தான் வர்றேன். கேட்டாத்தானே."