பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

வனதேவியின் மைந்தர்கள்

தாயாக்கினானோ? தந்தை தெரியாத பாவிக்குத்தான் சாத்திரத்திலும் கோத்திரத்திலும் இடமில்லையே?

... அடிப்பாவிப் பெண்ணே! உயிர் உனக்கு அவ்வளவு எளிதாகிவிட்டதா?

தத்தம்மா ஒரு வட்டம் சுற்றிவிட்டு அவள் முன் வந்து அமருகிறது.

“நான் தோட்டத்தில்தான் இருந்தேன். உன் சுவாசக்காற்று இழையும் இடமாகப் பறந்து வந்தேன். உன் கவடறியாத துயரத்தில், நானும் பங்கு கொண்டு தேரின் பின்புறமும், படகின் பின் விளிம்பிலும் ஒளிந்து வந்தேன். எனக்கு இளவரசரைக்குத்திக் காயப்படுத்த வேண்டும் என்று வெறியே ஏற்பட்டது. ஆனாலும் உனக்குப் பதட்டம் ஏற்படக்கூடாதே என்று பொறுத்தேன்.”

மன்னர் செய்த இந்த அநியாயத்தின் நிழல், காலமெல்லாம் ஒளிபாய்ச்சினாலும் போகாது.

அவள் துயரத்தை விழுங்கிக் கொண்டு சிலையாய் இறுகினாற்போல் அமர்ந்து இருக்கிறாள்.

அகலிகை நினைவுக்கு வருகிறாள். சதானந்தரின் தாய். அவள்மீது பாவத்தின் கருநிழல் படிந்தது; முனிவர் விட்டுச் சென்றார். கல்லாய் இறுகினாற்போல் வாழ்ந்தாளாம். அவள் மன்னர் வந்ததும் எழுந்து வந்து திரும்பி வந்த முனிவரையும் சேர்ந்து பணிந்தாளாம். கல்லைப்போல் கிடந்தவள் உம்மைக் கண்டதும் இளகி வந்தாளாம்.கதைசொல்கிறார்கள். இப்போது. அந்த கோதம முனியையும் மிஞ்சி விட்டீரே?

தத்தம்மா, பறந்து பறந்து கனிகளைக் கொத்தி வந்து, அவள் மடியில் போடுகிறது.

“மகாராணிக்கு நான்தான் உணவு கொடுக்கிறேன்.”

“தத்தம்மா, நீ இருக்கையில் எனக்கென்ன அச்சம்?..” என்று கரையோர தடாகத்து நீரில் முகத்தையும் கைகால்களையும் கழுவிப் புதுமை செய்து கொள்கிறாள்.