பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

வனதேவியின் மைந்தர்கள்


13

நந்தமுனி, அவள் முகத்தில் அந்த ஆற்றுநீரைக் கைகளில் முகர்ந்து வந்து, துடைக்கிறார். புளிப்பும் இனிப்புமான கனிகளை அவள் உண்ணக் கொடுக்கிறார். யானைகள் ஆற்றில் இறங்கிச் செல்கின்றன.

எல்லாம் கனவு போல் தோன்றுகிறது.

“சுவாமி, இங்குதான் என் தந்தை ஏர்பிடித்து உழுதாரோ?”

“ஆற்றுக்கு அக்கரை. நாம் பார்ப்போம். அந்த இடத்தில் இப்போது தானிய வயல்கள் விரிந்திருக்கின்றன. அப்பால் வாழை வனத்துக்கு யானைகள் செல்கின்றன. அதையும் கடந்தால், சத்திய முனியின் இருக்கை, வேடர்குடில்கள் வரும் யாவாலி அம்மை இருந்த ஆசிரமம். இக்கரையில் சிறிது தொலைவு சென்றால், மார்க்க முனியிருந்த ஆசிரமம் தெரியும்.அவர் இப்போது இல்லை. அவர் இருந்த இடத்தில்தான் பெரியன்னை இருந்தார், முன்பு. எனக்குக்கூட நினைவு தெரியாத நாட்கள் அவை, இப்போது, நாம் தங்கப் போவது, பூச்சிக்காடு என்று முன்பு அழைக்கப்பட்ட வனப்பகுதி. பெரியம்மை அங்கே செல்கிறார். கிழக்கே சென்றால் மிதுன புரி.”

இவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒர் ஒற்றை ஒடம் வருகிறது. முனி கைதட்டி அழைக்கிறார்.

மாநிற முகம் அரையில் வெறும் நார்க்கச்சை முடியை மேலே முடிந்த கோலம், மீசை முளைக்காத பாலகன்.அவன் தான் துடுப்புப் போட்டு வருகிறான்.

“சம்பூகா? தேவியை அக்கரை கொண்டு செல்ல வேண்டும். பெரியம்மா நலமா? நீ மிதுனபுரிக்கா போய் வருகிறாய்?”

“ஆமாம் சுவாமி. அங்கே படைத்தலைவருக்கு, மஞ்சள் பரவும் நோய் வந்துவிட்டது. மூன்று நாட்களாய் சென்று அவருக்குப் பணி செய்து விட்டு வருகிறேன். நிறையப் பேருக்கு இந்த நோய் வந்துவிட்டது சுவாமி!”