பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

133

கோரைப் பாய் விரிப்பில் நிழலுருவமாகத் தெரிபவர். எடுப்பான நாசி; அகன்ற நெற்றி, நூலிழைப்போல் வெண்கூந்தல் விரிந்து தோள்களில் விழுந்திருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே உருவம் தன் கையைப் பற்றி அவளை அழைத்துக் கொண்டு மரம் செடி, கொடி என்று காட்டிக் கதை சொன்ன அதே அன்னை. ஆனால், முகத்தில் காலம் இட்ட கோடுகள் கிறுக்கல்கள், அவள் வாழ்க்கையின் புதிர்போல் விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றன்.

முதியவளின் கண்களில் ஒளி திரண்டு கூர்மையாகிறது.

“அம்மா..!” என்று பூமகள் அவள் பாதம் தொட்டுப் பணிகிறாள்.

“தாயே, உங்களுக்குத் தேவையான சஞ்சீவனி இனி உங்களுக்கு அலுப்பும் ஆயாசமும் இருக்கலாகாது”

“எனக்குப் புரியவில்லையே, நந்தா? அயோத்தி மன்னனின் பட்டத்து அரசியா? அவளா இந்தக் கானகத்துக் குடிலில் வந்திருக்கிறாள்? பதினான்காண்டுகள் கானகத்தில் இருந்ததும், மாற்றான் தோட்டத்தில் சிறை இருந்ததும் காற்று வாக்கில் செய்திகள் வந்தன. வேதபுரிச்சாலியர் வந்து சொன்னார்கள். அந்த என் குழந்தையா இங்கு வந்திருக்கிறாள்? என்னைக் கூட்டிச் செல்லுங்கள் என்று தானே சொன்னேன்? மறுபடியும் கானகமா? அதுவும் இந்த நிலையில்”. அவள் கூந்தலை அன்புடன் தடவி, “பயணத்தில் களைத்திருப்பாய். தேர்ப்பாதைகூடச் சரியாக இருக்காதே? மன்னர் வெளியிலிருக்கிறாரா? அயோத்தியின் பட்டத்து அரசி, இங்கே வந்திருக்கிறாய், மகளே. நான் என்ன பேறு பெற்றேன்!” என்று தழுவி முத்தமிடுகிறாள்.

“திருமணத்துக்குப் புறப்பட்டு வர வேண்டும் என்று வந்தவளால் பார்க்க முடியவில்லை. நீ மன்னரோடு தேரில் கிளம்பும்போதுதான் வந்து பார்த்தேன். குழந்தாய், தேரைவிட்டிறங்கி இந்தத் தாய் அன்போடு உனக்குப் பிரியமான கனிகளை இலைப்பையில் போட்டுத் தந்தேனே.”