பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

வனதேவியின் மைந்தர்கள்


அவள் பெண்மையின் உயர் முடியேறி நிற்கிறாள். இன்பம் துன்பம் இரண்டும் கலந்த ஒரு பேரின்பம். தாய். அவள் ஒரு தாய். இரண்டு மக்கள். ஒன்று வெண்மை மேவிய தந்த நிறம் மற்றது செம்மை மேவிய நிறம். ஒன்று வாளிப்பாக இருக்கிறது; மற்றது சற்றே மெலிந்து இருக்கிறது லூ லூ லூ. என்று பெண்கள் ஓடிவந்து குலவை இடுகிறார்கள். மிதுனபுரியில் இருந்து பெற்று வந்த கரும்புக் கட்டியைக் கிள்ளி வாயில் வைக்கிறாள் பெரியன்னை,

இளங் காலை நேரத்தில் கொட்டும் முழக்குமாகப் பிள்ளைகள் பிறந்ததை அவர்கள் கொண்டாடுகிறார்கள்.

     “வனதேவி தாயானாள் மங்களம்
     மக்கள் இரண்டு பெற்றெடுத்தாள் மங்களம்
     ஈ எறும்பு ஈறாக, ஊரும் உலகம் அறியட்டும்
     காக்கைக் குருவி கருடப்புள், அத்தனையும் அறியட்டும்!
     யானை முதல் சிங்கம் வரை, வனம் வாழ்வோர் அறியட்டும்.
     வானைத்தொடும் மாமரங்கள் செடி கொடிகள் பூண்டுவரை,
     தேவியை வாழ்த்தட்டும்; பூமகளை வாழ்த்தட்டும்.
     வான்கதிரோன் வாழ்த்தட்டும் நிலவும் நீரும் வாழ்த்தட்டும்.”

கரவொலியும் வாழ்த்தொலியும் கானகமெங்கும் பரவும் போது, பூமகள்,

நிறை இன்பப் பரவசத்தில் கண்களை மூடுகிறாள்; நித்திரையில் ஆழ்கிறாள்.


15

பூமிஜா குடிலைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். அவள் பிள்ளைகள், இப்போது தளர்நடை நடந்து, பெரியன்னைக்கு ஒயாமல் தொல்லை கொடுக்கிறார்கள். குடிலுக்குள் ஒசைப் படாமல் அவர்கள் குற்றி வைத்த தானியத்தை இரைத்து அதில் நீரோ, சிறுநீரோ பெய்து வைத்திருக்கிறார்கள். பெரியன்னைக்குப் பார்வை துல்லியமாக இல்லை. வேடுவமக்கள் சோமாவோ,