பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

179

“நாங்கள் யாருமே அம்பெய்யமாட்டோம். குருசாமி யாருமே அம்பு எய்யக்கூடாது என்று சொன்னார். அம்பு போன்ற முள்ளினால் பூமியைத்தான் கிளறுவோம். கரும்பு எங்களைவிட உயரமாக வளர்ந்தது. அப்போது சம்பூகன், மாதுலன் குழலூதினால் வனதேவி சந்தோசப்பட்டு நிறைய மாங்கனி, கரும்பு, தேன் எல்லாம் தருவாள் என்றான். நாங்கள் முன்பெல்லாம் ஒணானைப் பிடித்து கல்துக்கச் சொல்வோம்; நத்தைக் கூடுகளை உடைப்போம். அதெல்லாம் ஒன்றுமே செய்வதில்லை. எங்கிருந்து யார் அம்பு போட்டார்கள்? யார்... யார்... யார்...”

யார்... யார்... என்று அந்தக் கானகம் முழுதும் எதிரொலிப்பது போல் அவளுக்குத் தோன்றுகிறது.

மெளனமாக நிற்கும் சத்திய முனிவரின் முன் விழுந்து பணிகிறாள்.

“எந்தையே, இந்தப் பாவம் செய்தவர் யாராக இருந்தாலும், அவரை அவர் செயலாகிய பாவமே தண்டிக்கட்டும்...”

கண்ணீர் முத்துக்கள் சிதறி அவர் காலடியில் வீழ்கின்றன.

அவர் அவளை எழுப்புகிறார். “மகளே, வருந்தாதே, இயற்கையை அழிக்கும் செயல் புரியும் எவருக்கும் அதுவே பிறவிப் பிணியாகும். சம்பூகனைக் கொல்வது அவர்கள் அந்தணர்களைக் காப்பாற்றும் தருமத்தில் பட்டது என்பார்கள்.”

“அவன் பிறப்பே, ஏதோ பாவத்தின் பயன் என்று அநாதையாக விட்டார்கள். நாம் அவனை மனிதனாக வாழ வைக்க முயன்றோம்... மூவுலகும் புகழ்வதாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு முடி மன்னன், இந்தக் குற்றமற்ற சிறுவனை வீழ்த்தியது, ஒரு சிங்கம் ஒரு சிற்றெரும்பைக் கண்டஞ்சி, அதை அறைந்து கொன்றாற் போல் இருக்கிறது. அவர்கள் உடல் சம்பந்தப்பட்ட வலிமையைவிட, இந்தச் சிறுவனின் உயிராற்றல் ஆன்ம வலிமை கண்டஞ்சி, அழிக்க முற்பட்டிருக்கிறார்கள். வேதம், கல்வி, மேலாம் அறிவு, ஞானம், எல்லாம், பிறப்பினால் மேற்குலத் தந்தையின் வழி வந்தவருக்கே உரியது என்று தீர்த்துவிட்ட